அண்டை நாட்டுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டதால் எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: 100வது பரிசை வென்று சாதனை

ஓஸ்லோ: எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது அலிக்கு இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை  படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு  எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது அலிக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர், அண்டை நாடான எரிட்டிரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப்  பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார்.

20 ஆண்டாக நிலவிய இப்பிரச்னை தீர்க்கப்பட்டதால், இரு நாடுகளில் வசிக்கும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கண்ணீர் மல்க சந்தித்து ஒன்றிணைந்த நிகழ்வுகள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. மேலும், சர்வதேச நாடுகளுடனான  ஒத்துழைப்பு, உள்நாட்டில் அமைதியை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகளுக்காக அபை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நார்வேயின் ஓஸ்லோவில் நோபல் விருதுக் குழு கூறி உள்ளது. அமைதிக்கான 100வது நோபல் பரிசு வெல்லும் நபர்  என்ற பெருமையையும் அபை பெற்றுள்ளார். இவருக்கு வயது 43 என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரேட்டா மீது குவிந்த பெட்டிங்

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 223 நபர்களும், 78 அமைப்புகளும் பரிந்துரை செய்யப்பட்டன. இதில், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்ட துன்பெர்க்குக்கு இவ்விருது வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பருவநிலை  மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் ஸ்வீடனை சேர்ந்த 16 வயது சிறுமி துன்பெர்க், சமீபத்தில் ஐநா பருவநிலை மாநாட்டில் உரையாற்றினார். அப்போது அவர், ‘எவ்வளவு தைரியம் உங்களுக்கு? உங்கள் வெற்று வார்த்தையால் என்னுடைய  குழந்தை பருவத்தையும், கனவுகளையும் களவாடி விட்டீர்கள்’ என உலக தலைவர்களை மிரட்டிய விதம் பெரிதும் பாராட்டப்பட்டது. எனவே, கிரேட்டாவுக்கே விருது என பலரும் பந்தயம்  கட்டினர். இறுதியில் அவர் தேர்வாகவில்லை.  ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, நோபலுக்கு இணையான விருது கிரேட்டாவுக்கு ஐநா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: