கடந்தாண்டு பயிர்காப்பீட்டு தொகை வழங்ககோரி கலெக்டர் ஆபீசில் விவசாயிகள் திடீர் முற்றுகை: அலுவலக கேட்டை போலீசார் இழுத்து மூடியதால் 2 மணி நேரம் பரபரப்பு

திருவாரூர்: கடந்த ஆண்டிற்கான பயிர்காப்பீடு தொகை வழங்கக்கோரி திருவாரூரில் நேற்று விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கஜா புயலில் சம்பா சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்குரிய பயிர் காப்பீடு இழப்பீடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு இந்த காப்பீடு தொகை  விடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 357 கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி  தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக விளமல் கல்பாலம் அருகிலிருந்து  ஊர்வலமாக வந்தனர்.

இதில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநிலத் தலைவர் புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் வரதராஜன், துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தொடர்ந்து 2 மணி நேரம்  வரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்  நடைபெற்ற நிலையில் விவசாயிகள்  உள்ளே வர முடியாதபடி அலுவலகத்தின் நுழைவாயில் கேட்டை போலீசார் இழுத்து மூடினர். இதன்காரணமாக விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கலெக்டரின் உத்தரவின்பேரில் பொறுப்பாளர்கள்  பேச்சுவார்த்தைக்கு உள்ளே அழைக்கப்பட்டனர். இதனையடுத்து விடுபட்டு போன  கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்ததாக பி.ஆர். பாண்டியன் கூறினார்.

Related Stories: