ஆந்திராவிலிருந்து வரத்து அதிகரிப்பால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, பெத்தநாடார்பட்டி, வெய்க்காலிப்பட்டி, கல்லூரணி, மகிழ்வண்ணநாதபுரம், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, கருமடையூர், மூலக்கரையூர்,  சாலைப்புதூர், அருணாப்பேரி, ஆவுடையானூர், அரியப்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு  விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாது கேரள வியாபாரிகள் தங்கள் தேவைகேற்ப கொள்முதல் செய்வர்.

Advertising
Advertising

கடந்த மார்ச் மாதம் நாற்று பாவி 20 நாள் கழித்து வயல்களில் நடவு நட்டு 60 நாள் கழித்து தக்காளிகள் ஓரளவு விளைச்சல் இருக்கும். ஆனால் தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருவதால் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் தக்காளி செடியில்  இலை கருகல் மற்றும் மொட்டை நோய் ஏற்பட்டு செடிகள் பட்டுப்போய் காணப்பட்டது.  பல மருந்துகள் தெளித்து கஷ்டப்பட்டு தக்காளியை மகசூல் எடுத்து வந்தனர். மகசூல் முடியும் தருவாயில் காணப்படுவதால் கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே தக்காளி விற்பனைக்கு வந்தது.

இதனால் கிலோவுக்கு ரூ.18 முதல் 23 வரை விற்பனையானது. இது  விவசாயிகளுக்கு ஓரளவு  லாபத்தை கொடுத்தது. தினசரி மார்க்கெட்டிற்கு கீழப்பாவூர் ஒன்றியத்தில் இருந்து குறைந்த அளவே தக்காளி விற்பனைக்கு வந்ததால் மொத்த வியாபாரிகள், சில்லரை மற்றும் கேரள வியாபாரிகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து  தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.ஆந்திர மாநில தக்காளி சீதோஷ்ண நிலைக்கு தகுந்தாற் போல் இருப்பதால் சில்லரை வியாபாரிகள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் உள்ளூர் தக்காளி விலை போகவில்லை. ரூ.18 முதல் 23 வரை விற்ற தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையானது. இதனால் கீழப்பாவூர் ஒன்றிய விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தக்காளி பழங்களை பறித்து தனியாக கூடைகள், பெட்டிகள் வாங்கி பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஆகும் செலவு அதிகம் ஆகிறது. தற்போது  தக்காளிக்கு விலை இல்லாததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இதுகுறித்து பரிசீலனை செய்து எங்களுக்கு இழப்பீடு தரவேண்டும்’ என்றனர்.

Related Stories: