பாலைவனமயமாக்கலை தடுக்க குஜராத், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானாவில் 1400 கி.மீ. பசுமைச் சுவர்: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: குஜராத்தில் இருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ தூரத்திற்கு பசுமைச்சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுப்பாட்டுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டெல்லியை சுற்றிலும் மரங்களால் ஆன அரண் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏராளமான மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்ட காடுகளை மீட்டெடுத்தல் மற்றும் பாலைவனமயமாக்கலை தடுக்க குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் முதல் ஹரியானா மாநிலத்தின் பானிபட் வரை குஜராத் , ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி இடையே ஆரவல்லி மலைத்தொடர் வழியாக 1,400 கி.மீ தூரத்திற்கும், 5 க.மீ அகலத்திற்கும் மரங்களை வளர்த்து பசுமைச் சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவில் இத்தகையை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் பிற உலக நாடுகள் அதனை செயல்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற பாலைவனமயமாக்கலுக்கு எதிரான பல்வேறு நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பசுமைச்சுவர் தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டாலும், அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் இந்த திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தவும், 2030ம் ஆண்டுக்குள் பசுமைச்சுவர் அமைத்து முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பசுமைச்சுவர் அமைக்கப்பட்டால் தார் பாலைவனத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களை தாக்கும் வெப்பக்காற்று தடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: