விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

திருவாரூர்: விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், இந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு  தனி சன்னதியை கொண்ட கோயில் என்ற சிறப்பை பெற்றது. கல்விக்கு அரசி என்று அழைக்கப்படும் சரஸ்வதி அருள்பாலிக்கும் இக்கோயிலில் உள்ள அம்மனை கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர் தங்களது  குழந்தைகளை அழைத்து வந்து இங்கு வழிபடுவார்கள்.

அப்போது நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற உபகரணங்களையும் சரஸ்வதி அம்மனின் சன்னதியில் வைத்து பூஜை செய்வார்கள். மற்ற  கோயில்களில் ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் நடைபெறும்  உற்சவங்களை போன்று இல்லாமல் இக்கோயிலில் நவராத்திரி விழா மட்டுமே உற்சவ விழாவாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த  மாதம் 29ம் தேதி  துவங்கிய நவராத்திரி விழாவினையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. விஜயதசமி நாளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முன்னதாக இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து  கோயில் சன்னதியில் அமர வைத்து அங்கு நெல்மணிகளை பரப்பி அதில் குழந்தையின் வலது கை ஆள்காட்டி விரலால் அ மற்றும் ஆ எழுத்துக்களை எழுதி பழக வைப்பர். இதுமட்டுமின்றி ஏற்கனவே கல்வி கற்று  வரும் தங்களது குழந்தைகள் கல்வியில் மேலும் சிறந்து விளங்க இக்கோயிலுக்கு இந்தியா முழுவதுமிருந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வழிபடுவர். அதன்படி கோயிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சரஸ்வதி அம்மனை தரிசிக்க காலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை நெல் மணிகளில் அ, ஆ எழுத வைத்து  பழக்கினர்.

Related Stories: