ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம்: பொதுமக்கள் அச்சம்

கதுவா: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஹிராநகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், கடந்த 15 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பாலிருந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணி அளவில் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதல், 12 மணி நேரம் வரை தொடர்ந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்துமீறி தா்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் பயங்கர தாக்குதலால், ஹிராநகரில் குண்டு மழை பொழிகிறது. இதனால் அந்த ஊர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெளியில் சென்றால் குண்டு உடலைத் துளைத்து விடுமோ என்ற அச்சத்தால், வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக ஹிராநகர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்த ஆண்டு மட்டும் சுமார் 2,000 முறைக்கும் மேல் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனர், பலா் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: