டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்: சீன அதிபரின் வருகை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்திக்கும் மற்றொரு வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக 11ம் தேதி சென்னை வரும் சீன அதிபர் ஸி ஜின்பிங் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 12ம் தேதி புறப்படுகிறார்.அப்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் உலக புகழ்பெற்ற சுற்றுலா இடங்களான அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள். இருவரும் நடந்து சென்றபடியே உரையாடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள, டெல்லி 7 லோக் கல்யாண் மார்கில் நடைபெறுகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நீங்கலாக மற்ற கேபினட் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் சீன அதிபரின் வருகை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related Stories: