பராமரிப்பு பணி நிறைவு: பழநி கோயில் ரோப்காரில் சோதனை ஓட்டம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்கார், மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச் இயக்கப்படுகிறது. ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம். 1 மணி நேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்கார் கடந்த ஜூலை 29ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ரோப்கார் பெட்டிகளின் பழுதுகள், தரைத்தளம் மற்றும் மேல்தளத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஷாப்ட் இயந்திரம் மாற்றுதல், ரோப்கார் இரும்புக்கயிற்றின் உறுதித்தன்மை பரிசோதனை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ரோப்கார் பாகங்களின் உறுதித்தன்மை குறித்து பிரத்யேக கருவி மூலம் பரிசோதனை நடந்தது. 65 நாட்கள் நடந்த ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.

ரோப்கார் பெட்டியில் கற்கள் அடுக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதனை பழநி கோயில் செயல் அலுவலரும், தக்காருமான ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், ரோப்கார் வல்லுநர் குழு நிபுணர்கள் ரங்கசாமி, பாலசுப்பிரமணி, நாச்சிமுத்து மற்றும் பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சோதனை ஓட்டத்தில் ரோப்காரின் பாதுகாப்பு வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட பின், ஓரிரு நாட்களில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ரோப்கார் கொண்டு வரப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: