இந்திய ஜனநாயகத்தையும், அரசியல்சட்ட அடிப்படை கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:“சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும்  பிரதமருக்கு  கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி  போன்ற கலை - அறிவுலகச் சான்றோர்களை எல்லாம் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது; சமூக அக்கறை உள்ள  அத்தகைய முன்னோடிகளை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது; இது மிகவும் வெறுத்து ஒதுக்க வேண்டிய முன்னுதாரணம் ஆகும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கும், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டுங்கள் என்று கூறுவது, எப்படி தேசத் துரோகமாகும்?. இது எத்தகைய கொடுமை?. சட்டத்தின் ஆட்சிக்கு, பா.ஜ. தலைமையிலான மத்திய அரசில் இப்படியொரு சோதனையா? என்று கேள்வி எழுப்பும் அதே நேரத்தில், மத்தியிலுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை எந்த விதத்திலும்  ஏற்றுக் கொள்ள முடியாது.நாம், ஜனநாயக நாட்டில்தான்  வாழ்கிறோமா என்ற ஐயப்பாட்டையும்  அச்சத்தையும் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் ஏற்படுத்தி, பா.ஜ. அரசின் எதிர்மறைச் செயல்பாடுகள் பற்றிப்  பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் இந்த முயற்சி கண்டனத்திற்குரியது.சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ. அரசு உணர வேண்டும்.“ஆட்சி அமைக்கக் கிடைத்திருக்கும் மெஜாரிட்டி, மக்கள் மனமுவந்து அளித்தது. அதை திருப்பி எடுத்துக் கொள்ளும் மாட்சிமை மிக்க அதிகாரமும் மக்களிடமே இருக்கிறது” - இதுதான் ஜனநாயகம் கட்டமைத்து வைத்துக் கொண்டுள்ள தற்காப்பு அரண்! அதை மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்து, 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கினை உடனடியாகத்  திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கினை உடனடியாகத்  திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும்

Related Stories: