தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பாழடைந்த நிலையில் சமுதாய கூடங்கள்: பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை

வேலூர்: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட சமுதாய கூடங்கள், ரயில்வே இன்ஸ்டிடியூட், உடற்பயிற்சி கூடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதை சீரமைத்து மீண்டும்  பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இந்தியன் ரயில்வே உலகிலுள்ள ரயில்வேக்களில் மிகப்பெரியது. சரக்கு ரயில் போக்குவரத்து மூலமாக ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் கையாளப்படுகிறது. இதன் மூலமாக கிடைக்கும் வருவாயானது, பயண டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்  ஆகியவற்றை மானிய விலையில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டில் நீண்டதூர பயணத்திற்கு ரயில் சேவையே மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட ரயில்வே துறையில் பல்வேறு நிர்வாக நிலைகளின் கீழ் 14 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே துறை சார்பில் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கல்வி, மருத்துவம், இலவச  ரயில் பயண பாஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது.இதன் தொடர்ச்சியாக ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது குடும்ப சுபநிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளும் வகையில் சமுதாய கூடங்களை அமைத்தது. இந்த சமுதாய கூடம் ரயில்வே கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. 500 பேர் அமரும்  வகையில் 200 பேருக்கான விருந்து உண்ணும் இடம் என கட்டப்பட்டுள்ளன.

மேலும், குடிநீர் வசதி, ஓய்வறை, குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சமுதாய கூடங்கள் மூலமாக ரயில்வே ஊழியர்கள் பயனடைந்து வந்தனர். விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதன்  மூலமாக ரயில்வே வணிகப்பிரிவுக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.நாளடைவில் பராமரிப்பு பணிகள் முடங்கியதால் பல்வேறு நகரங்களிலும் உள்ள ரயில்வே சமுதாய கூடங்கள் பாழடைந்துள்ளன. செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டிக்கிடப்பதால் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சமுதாய  கூடம் இருந்த இடங்களில் இரவு, பகல் பாராமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிக்கிடக்கிறது. கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட போதை வஸ்துகள் பதுக்கிவைத்து விற்பனை செய்யும் இடமாகவும் காணப்படுகிறது.

அதேபோல், அன்றாட பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் ரயில்வே ஊழியர்கள் மனதையும் உடலையும் இளைப்பாற்றிக்கொள்ளும் வகையில் ரயில்வே இன்ஸ்டிடியூட்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் இரவு 8 மணி  வரையிலும் இந்த ரயில்வே இன்ஸ்டியூட்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கும். அன்றைய செய்தித்தாள்களை படித்தபடி நாட்டு நிலவரம், அரசியல் கலவரம் ஆகியவற்றை படித்து தங்களுக்குள் விவாதித்துக்கொள்ளும் சூழல் இருந்தது. இதேபோல், கேரம், பில்லியட்ஸ், செஸ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ரயில்வே ஊழியர்கள் தங்களது நண்பர்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். அறிவியல் சிந்தனை, பொது அறிவு  களஞ்சியம், ரயில்வே எழுத்துத் தேர்வுக்கான புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை ரயில்வே ஊழியர்கள் படித்து தங்களது பொது அறிவுத்திறனை வளர்ந்துகொண்டனர்.

தற்போது ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள இன்ஸ்டிடியூட்களும் அதன் வரலாற்று புகழை இழக்கும் நிலையில் உள்ளது. ஆங்கிலேயர் கால வடிவமைப்பில் கட்டப்பட்ட ரயில்வே இன்ஸ்டிடியூட்கள் தற்போது பொலிவிழந்து பரிதாப நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளன.

அதேபோல், ரயில்வே ஊழியர்களின் வாரிசுகள் உடல்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட ரயில்வே உடற்பயிற்சி கூடம் இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப வடிவமைக்க தவறிய நிலையில், பெயரளவில் இயங்கி  வருகிறது. ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளால் நிரம்பி வழிந்த உடற்பயிற்சி கூடத்தின் நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ‘தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறும் வகையில் சமுதாய கூடம், விளையாட்டு கூடம், உடற்பயிற்சி  கூடம் ஆகியவை அமைக்கப்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் வெகுவாக பயன்படுத்தி வந்தனர். உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்திய இளைஞர்களை ஊக்குவிக்கும்  வகையில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய சிறப்பான சேவைகளை வழங்கி வந்த ரயில்வேயை சீரமைக்க தவறியதால் சமுதாய கூடம், விளையாட்டு கூடம், உடற்பயிற்சி கூடம் ஆகியவை பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ரயில்வே துறையை தனியார்  மயமாக்க உள்ள நிலையில், இழந்த வருவாயை மீண்டும் பெறும் வகையில் இனி வரும் காலங்களிலாவது அவற்றை சீரமைத்து ரயில்வே ஊழியர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: