பிரதமருக்கு கடிதம் எழுதியது தேசத் துரோகமா?: வைகோ, முத்தரசன் எதிர்ப்பு

சென்னை: பிரதமருக்கு கடிதம் எழுதியது தேசத் துரோக குற்றமா என்று மதிமுக ெபாதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:  இந்தியா  முழுவதும் நாள்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்  நடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் பாஜக அரசும், பிரதமர் மோடியும்  வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கக்கூடாது என்று, எழுத்தாளர்கள்,   சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு  வெளிப்படையாக மடல் எழுதினர். பிரதமருக்கு இந்தக் கடிதம் தீட்டிய  அறிஞர்கள் 49 பேர் மீது தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப்  புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது  உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளது. ஜனநாயக  நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை  ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும்.

 இத்தகைய  போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும்.  அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது  போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் :  இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமருக்கு கடிதம் எழுதி தங்களது கருத்துக்களை கூறுவதற்கு உரிமை உண்டு. அத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் தனது அலுவலக வாயிலாக பதில் அனுப்புவது  கடமையாகும். ஆனால் இன்று பிரச்னை தலைகீழாக உள்ளது மட்டுமல்ல, மிக அபாயகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமருக்கு பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி, நடிகர் அனுராக் காஷ்யா, வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் நாட்டில் நடைபெற்று வரும் விரும்பதகாத படுகொலைகள், தாக்குதல்கள், இஸ்லாமிய  மற்றும் தலித் மக்களுக்கு எதிரான கூட்டுக் கும்பல் தாக்குதல்கள் குறித்து கடிதம் எழுதினர். நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டிப்பதுடன் இதனை திரும்ப பெற வேண்டுமென இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Related Stories: