காட்டுமன்னார்கோவில் அருகே இடிந்து விழுந்த பாலம் சீரமைக்காததால் 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிப்பு

*இறந்த உடல்களை இடுகாட்டுக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆழங்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்டது வீரசோழபுரம். கீழணையிலிருந்து விவசாயத்துக்காக செல்லும் வடக்குராஜன் பாசன வாய்க்கால் இப்பகுதியை கடந்துதான் செல்கிறது. வீரசோழபுரம், கருப்பேரி, ஆழங்காத்தான் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாய நிலங்கள், கால்நடை மேய்ச்சல் மற்றும் இடுகாடு உள்ளிட்ட தேவைகளுக்காக வடக்குராஜன் வாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும். கடந்த 21 வருடங்களுக்கு முன்பு வீரசோழபுரம் வடக்குராஜன் வாய்க்காலில் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் வசதிக்காக குறுகிய நடைபாலம் கட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மண் அரிப்பு போன்ற காரணங்களால் பாலத்தின் தூண்கள் சேதமடைந்து பாலம் இடிந்து விழுந்து விட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வடக்குராஜன் வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறிப்பிடும் வகையில் இல்லை. அதனால் இடிந்த பாலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் இறுதியில் வடக்குராஜன் வாய்க்காலுக்கு கீழணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி வடக்குராஜனில் 200 கனஅடி முதல் 500 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதேபோல இவ்வருடமும் வடக்குராஜனில் நீர்வரத்து அதிகளவில் இருக்கிறது. இதனால் ஏற்கனவே இடிந்த பாலம் முற்றிலும் உடைந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதி கிராமங்களில் இறப்பு ஏற்படும் பட்சத்தில் இடுகாட்டுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் தங்களின் கிராமத்துக்குள்ளேயே இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பரம்பரை வழக்கங்களை மாற்ற விருப்பமில்லாதவர்கள் சிலர் வடக்குராஜன் வாய்க்காலில் இறங்கி இறந்தோரின் உடலை தூக்கிச்செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்காகவும், ஆற்றுப்படுகையில் இருக்கும் காய்கனி தோட்டத்துக்கு செல்லவும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக வடக்குராஜன் வாய்க்காலை கடக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஞ்சமேடு அல்லது 3 கிலோமீட்டர் தூரம் உள்ள தில்லைநாயகபுரம் வரை நடந்து சென்று அப்பகுதியில் உள்ள பாலங்கள் வழியாக செல்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலில் 20 வருடங்களுக்கு முன்பு அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் ஊராட்சி நிதியில் பாலம் கட்டப்பட்டது.  அதுபோல தற்போது புதிய பாலம் கட்ட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையின் ஒப்புதல் வேண்டும் என தெரிவிக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால் தங்களுக்கும் பாலத்துக்கும் சம்பந்தமில்லை என தெரிவிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகமும், தமிழக பொதுப்பணித்துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் தரமான புதிய பாலத்தை கட்டி கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: