சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விடுமுறையில் இருந்த பேராசிரியருக்கு வகுப்பறையில் தூங்கியதாக ‘மெமோ’

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், விடுமுறையில் இருந்த பேராசிரியர் ஒருவருக்கு, வகுப்பறையில் தூங்கியதாக மெமோ அளித்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சேலம் கருப்பூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் 25 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 150 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் வைத்தியநாதன், உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தங்கவேல், நேற்று முன்தினம் மெமோ ஒன்றை அனுப்பினார். அதில், ‘கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று, காலை 10.10 மணிக்கு மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டிய நேரத்தில், வகுப்பறையிலேயே தூங்கியதாக, மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.  

பல்கலைக்கழக சாசன விதிமுறைகளுக்கு முரணாக, பணிநேரத்தில் வகுப்பறையில் தூங்கி, கடமையிலிருந்து தவறியுள்ளீர்கள். எனவே, பணியாளர்கள் ஒழுங்கு விதிகளின்கீழ் தங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால், மெமோவில் குறிப்பிட்டுள்ள 21ம் தேதியன்று, சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் வைத்தியநாதன், பல்கலைக்கழகத்தில் பணியில் இல்லை. முன்னதாகவே அவர் விடுமுறை கடிதம் அளித்துவிட்டு, பெங்களூருக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவருக்கு மெமோ அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: