குலசை கோயிலில் அதிர்வை ஏற்படுத்தும் டிரம்ஸ் வாசிக்க தடை; போலீஸ் கட்டுப்பாடு விதிப்பு

குலசேகரன்பட்டினம்; குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் கோயிலுக்கு வரும் தசரா குழுவினர் மிக அதிர்வை ஏற்படுத்த கூடிய டிரம்ஸ் வாசிக்க தடை விதித்து போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.மைசூருக்கு அடுத்தப்படியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழாவில் கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தசரா குழுவினருக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். தசரா குழு பக்தர்கள் வேலாயுதம், சூலாயுதம், அரிவாள், கத்தி, வாள் போன்ற இரும்பினால் ஆன ஆயுதங்களை கொண்டுவரக்கூடாது. அதனை தங்கள் வாகனத்திலோ அல்லது குழுத்தலைமையிடத்திலோ வைத்து விட்டு தான் கண்டிப்பாக வரவேண்டும். கோயில் பகுதிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்படும்.

தசரா குழுக்கள் மிக அதிர்வை ஏற்படுத்தக் கூடிய டிரம்ஸ், பேண்ட்செட், தார தப்பட்டை, சென்டா மேளம் போன்ற இசை வாத்தியங்களை கோயில் முகப்பு மண்டபத்தில் வந்த உடன் இசைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அம்மனுக்கு உகந்த இசை வாத்தியங்கள் மட்டுமே இசைக்கப்பட வேண்டும். மிக அதிர்வான இசைக்கருவிகளை இசைக்கும் போது கோயில் நிர்வாகத்தின் சார்பிலோ, போலீசார் அறிவிக்கும் அறிவிப்புகளோ பக்தர்களுக்கு கேட்கமுடியாத நிலை ஏற்படுகிறது.தசரா குழுவினர் சாதி ரீதியான கொடி, சாதி தலைவர்கள் படம் பதித்த பனியன், சட்டை, ஆடைகளை அணிந்து கோயில் வளாகத்தில் வரக்கூடாது என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

Related Stories: