நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை சோதனை முழு வெற்றி: வடகொரியா அறிவிப்பு

சியோல்: முதல் முறையாக நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியா கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வகை ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறது. இது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், கொரியா தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. வடகொரியா  அதிபர் கிம் ஜாங் உன்னுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின், அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவதாக வடகொரிய கூறியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. மீண்டும் அணு ஆயுத  பேச்சுவார்த்தையை இந்த வார இறுதியில் தொடங்க அமெரிக்காவும், வடகொரியாவும் முடிவு செய்தன.இந்நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ‘புக்குக்சேங்-3’ என பெயரிடப்பட்ட ஏவுகணையை முதல் முறையாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுப்பட்டதா அல்லது  கடலுக்கடியில் அமைக்கப்பட்ட ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் தனது முதல் நீர்மூழ்கி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், இது குறிப்பிடத்தக்க சாதனை எனவும் வடகொரிய  அறிவித்துள்ளது.

வடகொரியாவுக்கு உள்ள அச்சுறுத்தலை முறியடிப்பதில் இந்த ஏவுகணை சோதனை மிக முக்கியமான கட்டம் என வடகொரிய தெரிவித்துள்ளது. இந்த சோதனையால் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என  வடகொரியா தெரிவித்தது. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தால், விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை காட்டுவதற்காக. இந்த சோதனையை வடகொரியா நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: