பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு; அஜினமோட்டாவுக்கு தடை குறித்து விரைவில் நடவடிக்கை : அமைச்சர் கருப்பணன் விளக்கம்

சென்னை : தமிழகத்தில் அஜினமோட்டாவை தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுப்பாடு குறித்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடு கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அந்த நேர கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கருப்பணன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,இந்த ஆண்டும் புதுமையாக பல்வேறு பட்டாசு ரகங்கள் வந்து இருப்பதாகவும் எனினும் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தரப்படும், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து ஒரு முறை பயன்பாட்டிற்கான பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து, தமிழகத்தில் அஜினமோட்டா என்றும் வேதிப் பொருளை தடை விதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.சி. கருப்பணன், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் உணவு சுவையூட்டியான அஜினமோட்டாவிற்கு தமிழகத்திற்கு தடை விதிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது எனவும் விரைவில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று கூறினார். உடல் நலனுக்கு கேடுவிளைவிக்கும் அஜினோமோட்டோவை தடை செய்ய நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: