வேலூர் அருகே துணிகரம் பொம்மை துப்பாக்கியை காட்டி கன்டெய்னர் லாரி கடத்தல்: 4 பேர் கைது; ஒருவருக்கு வலை

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பொம்மை துப்பாக்கியை காட்டி டிரைவரை தாக்கி, கன்டெய்னர் லாரியை கடத்தி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் கடந்த 29ம் தேதி இரவு 10.30 மணியளவில் காரும், கன்டெய்னர் ஏற்றி வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சேதம் அடைந்தது. இதையடுத்து  காரில் இருந்த 5 பேர், லாரி டிரைவரான  நாமக்கல்லை சேர்ந்த அர்ஜூனன்(41) என்பவரை ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும், சேதமடைந்த காரை சரிசெய்ய ₹60 ஆயிரம் வழங்கும்படி தகராறு செய்தனர். பின்னர், அர்ஜூனனை அழைத்துக்கொண்டு ஒருவர் கன்ெடய்னர் லாரியில் சென்னை நோக்கி சென்றார். மற்ற 4 ேபரும் காரில் லாரிக்கு முன்னால் சென்று  கொண்டிருந்தனர்.பெரும்புதூர் அருகே சென்றபோது காரை திடீரென நிறுத்தி இறங்கிய 4 பேரும், லாரியை நிறுத்தியுள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து அர்ஜூனனை துப்பாக்கியை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கினர். ஆனால் அவர்களிடமிருந்து அவர் தப்பி  சென்றார். இதையடுத்து 5 பேரும் லாரியை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து, அர்ஜூனன், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில்  போலீசார் பெரும்புதூர் சென்று விசாரணை நடத்தினர். அதில் லாரியை கடத்தி சென்றது பெரும்புதூர் மளச்சூர் பகுதியை சேர்ந்த நாகராஜ்(37), யுவராஜ்(32), மணிகண்டன்(24), ராஜேஷ்(25), பாலச்சந்திரன் என்பதும், பொம்மை துப்பாக்கியை காட்டி லாரியை கடத்தி சென்றதும்  தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நாகராஜ், யுவராஜ், மணிகண்டன், ராஜேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலசந்திரனை தேடி வருகின்றனர். மேலும், அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், கன்டெய்னர்  லாரியை பறிமுதல் செய்து பள்ளிகொண்டா கொண்டு வந்தனர்.

Related Stories: