ஹாங்காங்கில் சீனாவுக்கு தொடர்கிறது எதிர்ப்பு,..போலீசால் சுடப்பட்ட மாணவரின் பள்ளிக்குள் அமர்ந்து போராட்டம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் போலீசாரால் சுடப்பட்ட மாணவனின் பள்ளியில் அமர்ந்து 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஹாங்காங்கில், குற்றவாளிகளை நாடு கடத்தி சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து கடந்த 4 மாதங்களாக போராட்டம் நடந்து வருகின்றது. நேற்று முன்தினம் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். பதிலுக்கு போலீசார் கண்ணீர் புகை குண்டு, ரப்பர் புல்லட்களால் தாக்கினர்.  துசான் வான் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கும்பலால் போலீசார் தாக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் சாங் சிக்கின்(18) என்ற மாணவர் நெஞ்சில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாணவனை போலீசார் சுடும் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதில் மாணவன் போலீசாரை நீண்ட மரக்கம்பினால் தடுக்க முயலுகிறார். அப்போது அவரை போலீஸ் அதிகாரி சுடுகிறார். போலீசாரின் இந்த செயலை கண்டித்து, துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மாணவன் படிக்கும் பள்ளியில் அமர்ந்து நேற்று 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

Related Stories: