பிளாட்டில் தனியாக வசித்து வந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி கொலை? ஐதராபாத்தில் பரபரப்பு

ஐதராபாத்: இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சுரேஷ்குமார், ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஆர். நகர் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இஸ்ரோவின் தேசிய தொலைநிலை உணர்திறன் மையம் எனப்படும் நேசனல் ரிமோட் சென்சிங் சென்டரில் (என்ஆர்எஸ்சி) மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் எஸ்.சுரேஷ்குமார் (56). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், ஐதராபாத்தின் அமீர்பேட் பகுதியில் பிளாட் ஒன்றில் தனியாக வசித்து வந்தார். மனைவி இந்திரா, வங்கி அதிகாரியாக உள்ளார். இவர் சமீபத்தில் தான் சென்னைக்கு மாற்றலாகி சென்றுள்ளார். ஒரு மகன் அமெரிக்காவிலும், மகள் டில்லியிலும் வசித்து வருகின்றனர்.

சுரேஷின் மனைவி நேற்று தொலைபேசியில் சுரேசை பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லாததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்க சொல்லியுள்ளார். வீடு தட்டப்பட்டும் திறக்காத நிலையில், எஸ்.ஆர். போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுரேஷ், சடலமாக கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் விசாரணையில், சுரேஷின் தலையில் 3 இடங்களில் பலத்த காயம் இருந்தது. பெரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கியதால் ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள், இவரை கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று யூகித்துள்ள போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். எதற்காக, இந்த மர்ம சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவில்லை.

கடந்த திங்களன்று, மாலை 5.30 மணியளவில் அவர் பிளாட்டுக்குத் திரும்பினார் என்று, அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், அவர் செவ்வாய்க்கிழமை வேலைக்கு வரவில்லை என்று, என்ஆர்எஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவருடன் பணியாற்றும் சக அதிகாரிகள் நேற்று செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போது, அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக, அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, எஸ்.ஆர்.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முராலி கிருஷ்ணா கூறுகையில், “அவரது தலையின் பின்புறத்தில் மூன்று காயங்கள் இருந்தன. பழைய குடியிருப்பில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. பிளாட்டில் இருந்து விலைமதிப்புமிக்க பொருட்கள் எதுவும் திருடுபோகவில்லை. தீவிரவிசாரணை நடக்கிறது’’ என்றார்.

Related Stories: