பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம்(பிபிசிஎல்), ஷிப்பிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா(எஸ்சிஐ) உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்குகளை விற்பதன் மூலம் 65,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் இந்தியா முழுவதும் நான்கு இடங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களையும், 6,000க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் மையங்களையும் கொண்டுள்ளன. தற்போது பாரத் பெட்ரோலியத்தின் உலகலாவிய சந்தை மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பாரத் பெட்ரோலியத்தையும் (பிபிசிஎல்) தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, பங்கு விலக்கலுக்கான மத்திய அரசின் செயலர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, பாரத் பெட்ரோலியத்தில் அரசுக்கு 53.3 சதவிகிதமும், ஷிப்பிங் கார்ப்பரேஷனில் 63.8 சதவிகிதமும் பங்குகள் உள்ளன. அதேபோல், நீப்கோ மற்றும் தெஹ்ரி ஹைட்ரோ நிறுவனங்களிலும் பங்குகள் உள்ளன.

இந்த நான்கு நிறுவனங்களின் முழு பங்குகள் மற்றும் கான்கர் நிறுவனத்தில் உள்ள 54.8 சதவிகித பங்குகளில் 30 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பங்கு விலக்கல் மூலம் 65,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதில், பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள முக்கியமான முதல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கலாம் கூறப்படுகிறது. குறிப்பாக, பிபிசிஎல் நிறுவனம் நாடாளுமன்றத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு பொதுத்துறை நிறுவனமாக்கப்பட்டதால், அதன் பங்குகளை விற்க நாடாளுமன்றத்தின் அனுமதியும் கூடுதலாக தேவைப்படும் என தெரிகிறது.  முன்னதாக, பட்ஜெட்டின்போது பல பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் 51 சதவீதத்துக்கு கீழ் குறைக்கப்படும் என்று நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: