மூதாட்டி, லாரி உரிமையாளர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிரமம் ஊராட்சி மருதங்குடியை சேர்ந்தவர் யாக்கப்பன் மனைவி சம்பூர்ணம் (60). இவர் தனது வீட்டிற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு கேட்டு வருகிறார். ஆனால் இணைப்பு வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். இதனால் விரக்தியடைந்த சம்பூர்ணம், நேற்று கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்திற்கு தனது மகள் ரீட்டா மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவாயில் வரும்போது சிவகங்கை டவுன் போலீஸ் எஸ்ஐ ரஞ்சித், கட்டுப்பாட்டு அறை எஸ்எஸ்ஐ வாசு ஆகியோர் சம்பூர்ணம் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் குடிநீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பூர்ணம் கூறுகையில், ‘‘வீட்டிற்கு மின் இணைப்பு பெற அரசு அதிகாரிகள் உத்தரவு அளித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் 10 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர். இதை கண்டித்து தீக்குளிக்க மண்ணெண்ணெய் கொண்டு வந்தேன்’’ என்றார்.

மற்றொரு சம்பவம்: நாமக்கல் மாவட்டம், படைவீடு  கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (39). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து  வருகிறார். கடந்த செப். 24ம் தேதி மானாமதுரை பகுதியில் லாரியில் மணல் ஏற்றி  வந்தார். அப்போது மானாமதுரை போலீசார் மணல் திருடி வந்ததாக லாரியை  பறிமுதல் செய்தனர். இதுவரை லாரி விடுவிக்கப்படவில்லை.இந்நிலையில்  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ரமேஷ் வந்தார். போலீசார் லாரியை  விடுவிக்கவில்லை என்று கூறி, கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தனது உடலில்  பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார். பாதுகாப்பு  பணியில் இருந்த போலீசார், அவரை மடக்கி பிடித்தனர்.  பின்னர் டவுன் போலீஸ் ஸ்டேசன் கொண்டு சென்று அவர் மீது வழக்கு பதிந்து கைது  செய்தனர்.

Related Stories: