எங்கு சென்றாலும் தாய்நாட்டை மறக்கக் கூடாது: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் வேண்டுகோள்

சென்னை: மாணவர்கள் எங்கு சென்றாலும் தாய்நாட்டை மறந்துவிட கூடாது, உங்களது கண்டுபிடிப்புகள் தாய்நாட்டிற்கும் உதவ வேண்டும் என்று  ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மாணவர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து  கொள்ள வந்திருந்தார். அவரை ஐஐடியின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி வரவேற்று ஐஐடியின் பட்டம் அளிப்பு விழா குறித்து அறிமுகம் செய்தார்.  பின்னர் பிரதமர் மோடி  முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களையும், பட்டம் பெற்ற 2140 மாணவர்களுக்கு பட்டங்களையும், வழங்கினார்.

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது:  உங்கள் வெற்றியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக உயர்ந்த  பங்கு உள்ளது. உங்கள் வெற்றிக்கு பின்னால் பெற்றோர்களின் தியாகங்கள், போராட்டங்கள் உள்ளது. இதேபோல் ஆசிரியர்களின் ஓய்வில்லா உழைப்பு  மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்குகிறது. நீங்கள் நல்ல பொறியாளர்களாக மட்டுமில்லாமல் சிறந்த குடிமகனாக இருக்க வேண்டும்.

உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலகின் மூத்த மொழியான தமிழ் பேசும் மாநிலத்தில் நாம் இருக்கிறோம். அண்மையில் அமெரிக்கா  சென்றிருந்தபோது அரசு தலைவர்கள், தொழில்துறையினர், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரை சந்தித்தேன். சந்தித்த அனைவருமே இந்தியா  குறித்தும், நாட்டின் இளைய தலைமுறை குறித்தும் பெருமிதமாக பேசினர். இளைஞர்கள் மீது நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பில் உள்ளேன். புதிய  இந்தியா உருவாக்குவதே அனைவரின் நோக்கம். ஐஐடியில் படித்தவர்கள் உலகம் முழுவதும் சிறப்பாக தடம் பதித்து வருகின்றனர். மேலும் அறிவியல்  ஆராய்ச்சியில் சாதனையாளர்களாக திகழும் பலர் ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். வாகனம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் ஸ்டார்ட் அப்  தொழில்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. உலகில் முதல் 3 ஸ்டார்ட் அப்  நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது. ரோபோடிக் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் புதிய  கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐஐடி கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப துறைகளில் உலக அரங்கில் இந்தியர்கள் தான்  முன்னிலையில் உள்ளனர்.

ஒட்டு மொத்த உலகமே இந்தியாவை ஒரு புதிய வாய்ப்பாக கருதிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ஒரு பிராண்டை  உருவாக்குவதில் ஐஐடி சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியா 5லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக்  கொண்டிருக்கிறது. இதில் மாணவ, மாணவிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த மத்திய அரசு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடுமையான முயற்சியும், உழைப்பும் எதையும் சாத்தியமாக்கும். எப்போதுமே சவாலான விஷயங்களில்  கவனத்தை செலுத்த வேண்டும்.மாணவர்களாகிய நீங்கள் வெளியே சென்றதும் உங்களுக்கு பல்வேறு வேலைகள் கிடைக்கும், எங்கு பணியாற்றினாலும், எங்கு வசித்தாலும்  தாய்நாட்டை மறந்துவிடாமல், தாய் நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும். உங்களது ஆய்வுகளும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் தாய்நாட்டிற்கு,  இந்திய சகோதரர்களுக்கும் உதவ வேண்டும்.வாழ்க்கை முறையால் ஏற்படும் நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு தீர்வு காண மாணவர்கள் முன்வர வேண்டும்.   மருந்துக்கு எப்படி காலாவதி தேதி இருக்கிறதோ, அதேபோல் மனிதனுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. எனவே இளைய தலைமுறையினர் தங்கள்  உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

60 வருட ஐஐடிவரலாற்றில் முதலிடம் பிடித்த பெண்

பி.டெக் கம்ப்யூட்டர் சையின்ஸ் மாணவி கவிதா கோபால். ஐஐடி தொடங்கி 60 ஆண்டுகளில் முதன்முறையாக, மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து  தங்கம் பதக்கம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: