விருதுநகரில் வெயில், மழையில் பாழாகும் சொக்கநாதர் கோயில் தேர்

விருதுநகர்: விருதுநகரில் வெயில், மழையில் நனைந்து பழமையான கோயில் தேர் பாழாகி வருவதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மேற்கு ரத வீதி அருகில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 650 ஆண்டு பழமையான ஸ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான பழங்கால தேர் பழுதடைந்ததால் புதிய தேர் சுமார் ரூ.37 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டது. புதிய தேரின் வெள்ளோட்டம் செப். முதல் வாரமும், அதை தொடர்ந்து செப்.10ல் ஆவணி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டமும் நடைபெற்றது.

அகலமான தேரின் மேற்பகுதி கூடார முகப்பு அகலமான சட்டங்களுடன் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்ததால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நிறைந்த ரத வீதியில் தேரை இழுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தெற்கு ரதவீதியில் செல்லும் போது ஆக்கிரமிப்பு கட்டிட முகப்புகளால் தேரின் மேற்பகுதி சட்டங்களின் அகலத்தை குறைத்து தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. புதிய தேர் சொக்கநாதர் கோயிலின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தேரின்றி திருவிழாக்களை முழுமையாக நடத்த முடியாமல் இருந்த நிலையில் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தேர் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வருகிறது.

தேரை பாதுகாப்பாக நிலைநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘பழமை வாய்ந்த சொக்கநாதர் ஆலயத்திற்கு தேர் இல்லாமல் இருந்த நிலையில் பெரும் பொருட்செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தேரை பாதுகாக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இந்து அறநிலையத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘அரசின் அனுமதி மற்றும் நிதி பெற்று பாதுகாப்பு கூடாரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories: