நாரதா ஊழல் வழக்கில் சிபிஐ அதிரடி மிர்சா - முகுல் ராயிடம் நேருக்கு நேர் விசாரணை

கொல்கத்தா: நாரதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மிர்சாவை பாஜ மூத்த தலைவர் முகுல் ராயின் வீட்டிற்கு அழைத்து சென்று, இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தினர். மே.வங்கத்தில் இணையதள செய்தி நிறுவனம் தொடங்க ஆளும் திரிணாமுல் காங்.கட்சியின் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கியதை நாரதா இணையதள செய்தி ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கடந்த 2014ம் ஆண்டு வீடியோ எடுத்து வெளியிட்டார்.

இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக மேற்கு வங்க மாநில பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் ராய் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள நிஜாம் பேலஸ் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மிர்சாவை, தெற்கு கொல்கத்தாவில் உள்ள முகுல் ராயின் வீட்டிற்கு நேற்று அழைத்து சென்ற சிபிஐ அதிகாரிகள், இருவரிடமும் நேருக்கு நேர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், முகுல் ராய் கூறுகையில், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது எனது கடமை,’’ எனக் கூறினார்.

Related Stories: