சிங்கம்புணரியில் கேள்விகுறியாகும் தென்னை நார் கயிறு தொழில்: தொழிலாளர்கள் கவலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தென்னை நார் கயிறு தொழில் நசிந்து வருவதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியின் அடையாளமாக தென்னை நார் கயிறு உள்ளது. தென்னை நார் தொழிலை நம்பி சிங்கம்புணரி பிரான்மலை,  கோபாலசேரி, ஒடுவன்பட்டி, நாடார்வேங்கைபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர். இத்தொழிலில் சிங்கம்புணரி பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதில் 80 சதவீதம் பெண்கள் ஆவர். தொழிலுக்கு உரிய பாதுகாப்பில்லாமல் திறந்தவெளி, மரத்தடி நிழலில் மழை, வெயில் பாராது உழைத்து வருகின்றனர். பாரம்பரிய முறையில் தென்னை நார்கயிறு கையினால் பிறிவிடும் தறிக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

மணப்பட்டி, எஸ்.வி மங்கலம் உள்ளிட்ட சில பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் கயிறு தயாரிக்கப்படுகிறது. கொச்சைக்கயிறு முதல் தேர் இழுக்க பயன்படும் வடக்கயிறு தயாரிக்கப்படுகிறது. வடக்கயிறு 4,6,8 இன்ச் தடிமன் அளவில் 20 அடி முதல் 40 அடி நீளம் வரை தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் மத்திய கயிறு வாரிய உறுப்பினர் குழந்தைவேலன் கூறுகையில், ‘தென்னை நார் கயிறு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதது. ஆனால் பிளாஸ்டிக் கயிறு மக்குவது கிடையாது. இதனால் மக்கள் பிளாஸ்டிக் கயிறுகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை 100க்கும் மேற்பட்ட கயிறு உற்பத்தி நிலையங்கள் இருந்தன. நாள் ஒன்றுக்கு 15 லாரிகளில் தென்னை நார் வந்தது.

அதன்மூலம் 20 டன் வரை கயிறு தயாரித்து குஜராத், மும்பை, மத்தியபிரதேசம், டில்லிக்கு உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது தேங்காய்நார் மட்டையாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் தென்னை நார்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, இத்தொழில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்துள்ளது.  இத்தொழிலை பாதுகாக்க தென்னை நார் கயிறுகளை அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். மாநில அரசு, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: