பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையான ஓவாமலை பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் 10க்கும் மேற்பட்ட ஓடைகளில் திடீரென தண்ணீரின் அளவு  அதிகரித்து கரை புரண்டு ஓடியது. இந்த தண்ணீர் சித்தரேவு - அய்யம்பாளையம் மருதாநதி பாலத்தின் அடியில், ஒன்று சேர்ந்து காட்டாற்று வெள்ளமாக வந்தது. அய்யம்பாளையம் பகுதியில் மழை இல்லாதபோதிலும், திடீரென வந்த காட்டாற்று  வெள்ளத்தை அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த காட்டாற்று தண்ணீர் சித்தரேவு அருகேயுள்ள தாமரைகுளத்திற்கு சென்றது.

மரம் விழுந்தது :

பெரும்பாறை மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போதிய பிடிமானம் இல்லாத மரங்களும், ஏற்கனவே பட்டுப்போன மரங்களும் சாய்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் பெய்த  மழையால் மஞ்சள்பரப்பு - புல்லாவெளி சாலையில் இலவம் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மேலும் மின்கம்பத்தின் மீது மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு  மலைச்சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அறுத்து எடுத்து அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது.

Related Stories: