மதுரை காமராஜர் பல்கலையில் ஓலைச்சுவடி, அரிய புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்: தமிழகத்தில் முதன்முறையாக நடக்கிறது

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொ.ப.மீனாட்சிசுந்தரம் நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இவற்றில் 60 ஆண்டுகளை  கடந்த நிலையில் மறுபதிப்பு வெளியிடப்படாத தமிழ், ஆங்கில இலக்கணம், கணிதம் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் 300 ஆண்டுகளுக்கு முந்தைய  தமிழ் இலக்கணம், நாடகவியல், கணிதம்,  ராமாயணம், சிவஞான போதம், அரிச்சுவடி, ஜோதிடம் உள்ளிட்ட ஓலைச்சுவடிகளும் உள்ளன.

இந்த  பழமையான புத்தகங்கள், அரிய வகை ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் முயற்சியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,  சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் இணைந்து  புதிய பணியை மேற்கொண்டுள்ளது.  அதாவது அழிவின் விளம்பில் உள்ள இந்த புத்தகங்கள், ஓலைச்சுவடிகளை தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர் கருவிகளை கொண்டு ஸ்கேன் செய்யப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இதன்பின்னர்  இந்த புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின்  இணையதளத்திலும்  புத்தக வடிவில் பதிவேற்றமாகி பார்வைக்கு வர இருக்கிறது.

இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.கிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஸ்கேன் செய்த பின் இணையதளத்தில் இருந்து மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இது இனி வரும்  காலங்களில் மாணவர்களுக்கு குறிப்பாக தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் பொதுமக்கள் தங்களிடம் அழியும் நிலையில் உள்ள அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பல்கலைக்கழகத்தில் கொடுத்து  இலவசமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்’’ என்றார்.

Related Stories: