வசிப்பதோ உயரத்தில்.... வாழ்க்கையோ பள்ளத்தில்...பாராமுகத்தால் பரிதவிக்கும் மலை கிராம மக்கள்

சேலம்: ஓலைக்குடிசைகளும், ஒட்டுத் திண்ணைகளும், ஒற்றையடி பாதைகளும், ஒப்பனையில்லா முகங்களும்  மலை கிராமங்களின் அடையாளங்கள். நாகரீகச் சுழற்சியில் நாடு தள்ளாடும் நேரத்திலும், ரசாயனம்  கலக்காத இயற்கை விவசாய  யுக்தி, வனங்களை  அழிக்காமல் நிலங்களை வளப்படுத்தும் சக்தி,  கூட்டுக் குடும்பங்களாய் இணைந்து வாழும் புத்தி என்று தொடர்கிறது இங்குள்ள மக்களின் வாழ்க்கை பயணம். நாம் நகரத்தில் இருந்து கூவிக் கொண்டிருக்கும் பண்பாடு,   கலாச்சாரம், மனிதநேயம், சகோதரத்துவம்,   மதநல்லிணக்கம் என்று அனைத்தையும் கடைபிடித்து, இன்றுவரை அதற்கான   ஆணிவேராய் இருப்பவர்கள் இவர்கள்தான். இப்படி மண்ணின் அடையாளச் சுவடுகளாய், உயரமான மலைகளில்  அவர்கள் வசித்தாலும், அவர்களின் வாழ்க்கைத்தரமோ, இன்னும் பள்ளத்திலேயேதான் இருக்கிறது என்பது நிஜ உள்ளங்களின் வேதனை.

தமிழகத்தின் பூர்வ குடிகளாக கருதப்படும் பழங்குடியின மக்கள் தமிழகத்தின் பல்வேறு மலைப்பகுதிகளில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை, விழுப்புரம் மாவட்டத்தின்  பெரியகல்வராயன், சின்னகல்வராயன் மலைகள், சேலம் மாவட்டத்தின் சேர்வராயன்மலை, பச்சைமலை, பாலமலை, நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை, ேபாதமலை,  தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலை, வத்தல்மலை, கிருஷ்ணகிரி  மாவட்டத்தின்  ேதன்கனிக்கோட்டை, அஞ்செட்டி என்று இவர்களின் வாழ்விடங்கள் நீண்டு கொண்டே போகிறது. இப்படி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மலைகிராம மக்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

மலைகிராமங்களின் வனப்பகுதியில் சிறிய அளவிலான நிலங்களில் சாகுபடி செய்யும் பயிர்களை சமவெளிக்கு கொண்டு வந்து விற்று, அதில் கிடைக்கும் வருமானமே இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. நாடு சுதந்திரம் ெபற்று 70  ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், இவர்கள் இன்றுவரை பூர்வகுடிகளாகவே வாழ்க்கை நடத்திக் ெகாண்டிருக்கின்றனர். விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் நாடு வேகமாக முன்னேறிக் ெகாண்டிருக்கும் சூழலில், சாலை, குடிநீர்,  சுகாதாரம், கல்வி, மருத்துவம் என்று அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் சிரமங்களோடு போராடி அந்த கிராமங்களிலேயே வசித்து வருகின்றனர்.

மழை, புயல், பனி, வெயில் என்று இயற்கை சீற்றங்களோடு போராடி வாழ்க்கை நடத்தும், இவர்கள் பெரும்பாலும் போராடுவது அடிப்படை வசதிகளுக்காக மட்டுமே. மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும்,  சலுகைகளையும் அறிவித்துள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் இவை, 90சதவீத மலைவாழ் மக்களை சென்றடையவில்லை என்பதே உண்மை. இதேபோல் தேர்தல் ேநரங்களில் அரசியல் கட்சிகளின் கால்படாத இடமாகவும் இந்த  மலைகிராமங்கள் இருக்கிறது. வாக்குறுதிகளை அள்ளிவீசும் கட்சிகள், முடிவுகள் வந்த பிறகு, இவர்களை கண்டு கொள்வதேயில்லை. குறிப்பாக தேர்தல் காலங்களில் ஒரு சமூகத்தின் ஓட்டு சதவீதத்தை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய்நகர்த்தி, வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரிப்பது வழக்கம். ஆனால் ஒரு சதவீத வாக்குவங்கி மட்டுமே உள்ளதால்  மலைவாழ்  மக்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து  வருகிறது.

ஆனாலும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறாமல், கண்டிப்பாக விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்ைகயை நகர்த்தி  வருகின்றனர். இவர்கள் நினைத்தால் நகரங்களுக்கு குடி பெயர்ந்து, கிடைத்த வேலைகளை செய்து, வயிற்றுப்பசி தீர்த்து, நவீனங்களுக்கு அடிமையாகி நம்மில் ஒருவராக நிச்சயம் வாழ முடியும். ஆனால் இதற்கான முயற்சிகளை இந்த மக்கள்  எப்போதும் எடுத்ததில்லை. நம் சமூகம் மறந்து ேபான, புறந்தள்ளிய பண்பாடு, கலாச்சாரம், சகோதரத்துவம், மனிதநேயம் என்று அனைத்ைதயும் மனங்களில் பாதித்து வாழும் பெருமைக்குரிய மனிதர்களாகவே  இன்றுவரை இருக்கின்றனர்.

எனவேஅவர்களை பாதுகாத்து முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் அரசு, பெரும் முனைப்பு காட்ட வேண்டும். மலைகிராமங்களில் இயற்கை வளத்தை பயன்படுத்தி சிறு தொழில்கள் தொடங்க வேண்டும். தேன், தினை, வரகு, சாமை,  புளி போன்ற வன வளங்களை  முறையாக பயன்படுத்தி, சந்தை படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித்தர வேண்டும். மலைவாழ் இளைஞர்களுக்கு சுய தொழில் கடன் வழங்க  முன்னுரிமை வழங்கவேண்டும். உழைக்கும் திறன்  மிக்க மலைவாழ் இளைஞர்களை, முறையாக பயன்படுத்திக்கொள்ளவும், அவர்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அரசு அக்கறை செலுத்தவேண்டும் என்பதே மக்கள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மண்சரிந்து, பாறைகள்  உருளும் வத்தல் மலை

தர்மபுரி வத்தல் மலையில் மண்சரிவு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் மினிவேன், மினிபஸ் போன்ற  வாகனங்களை இயக்க முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டூரிஸ்ட் வேன், வத்தல்மலையில் இருந்து இறங்கும்  போது விபத்துக்குள்ளாகி 40க்கும்  மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனால் வத்தல்மலையில் 4 சக்கர வாகனங்களை  இயக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஜீப்  மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.   கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த  கனமழைக்கு வத்தல்மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 முதல் 9 வரையிலான கொண்டை  ஊசி வளைவுகளில் மண் சரிந்து சாலை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில  நாட்களாக தர்மபுரி  மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மலை  சாலைகளில் பாறைகள் உருண்டு, மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

வறுமையால் திசை மாறும் சித்தேரிமலை

 

சமீபகாலமாக  செம்மரக்கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களும்,  கைது செய்யப்படுபவர்களும் மலைவாழ் கிராமங்களை சேர்ந்த பழங்குடியின இளைஞர்களாக இருப்பதும், இவர்களில்  பெரும்பாலானவர்கள்  படித்தவர்களாக இருப்பதும் அதிர்ச்சிகரமானது. உள்ளூரில் வேலை இல்லாத நிலையில் செம்மரம் வெட்ட மூளை சலவை செய்து, இளைஞர்களை   ஆந்திராவிற்கு புரோக்கர்கள் அழைத்து செல்கின்றனர். தர்மபுரியின் சித்தேரி மலையில் இருந்து,  2  ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட 7பேர், ஆந்திராவில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். ஆந்திர அதிரடிப்படை  போலீசில் சிக்கிய சில தொழிலாளர்கள் ஜாமீன் கிடைக்காமல், இன்றுவரை ஆந்திர சிறைகளில்  உள்ளனர். வறுமையால் தற்போதும் வழி மாறி செல்லும் அவலம் தொடர்கிறது.

பாதைக்கு தவமிருக்கும் பாலமலை, போதமலை

சேலம்  மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சியில் உள்ளது பாலமலை. 3,500 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலை மீதுள்ள, 33 குக்கிராமங்களில் 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் வசிக்கின்றனர். இதேபோல் ராசிபுரம்  போதமலையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்த மலைகளை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மக்கள், பாதை வசதிக்காக காத்திருக்கின்றனர் என்பதை விட, தவமிருக்கின்றனர் என்பதே ெபாருத்தமானது. அதிகாரிகள் இதற்கு  நடவடிக்கை எடுக்காத நிலையில், மக்களே முன்னின்று இந்த மலைகளில் சாலை அமைத்தனர். ஆனால் வழக்கு என்ற பெயரில் அதிகாரிகள் அதை முடக்கினர். இருந்தாலும் தொடர்ந்து இதற்காக போராடுகின்றனர். சாலை மட்டும்  வந்துவிட்டால் சகல வசதியும் கிடைக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

உயிர்ப்பலிகள் தொடரும் தளி, அஞ்செட்டி மலை

கிருஷ்ணகிரி  மாவட்டத்திலுள்ள மலைகிராமங்களில் யானைகள் நடமாட்டம் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் இங்குள்ள மலைகிராமங்களில் வாழும் மக்கள் பகல் நேரங்களில்  மட்டுமே ஊரை விட்டு வெளியே வந்து  செல்கின்றனர். ஓசூர், அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை என்று மலைகிராம வனப்பகுதிகளில் மனித-வனஉயிரின மோதல்கள் தொடர்கிறது. இதில் கடந்த 5ஆண்டுகளில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு நிரந்தர  தீர்வு காண வேண்டும் என்பது இம்மாவட்ட மலைகிராம மக்களிடம் தொடரும் கோரிக்கை.

கொடிய நோய்களின் கூடாரம் கொல்லிமலை

நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை, மூலிகை வாசம் வீசும் அரியமலையாக உள்ளது. ஆனால் இங்கு ெகாடிய நோய்களின் தாக்கமும் அதிகமாக உள்ளது. அதிலும் தற்போது மழைக்கால நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில்  அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாத இடமாகவே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட 9வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் மர்மநோய்களின்  கூடாரமாகவும் சில கிராமங்கள் மாறி வருகிறது. இங்குள்ள மக்களின் வறுமையை மூலதனமாக்கி, குழந்தைகளை சொற்ப விலைக்கு வாங்கிச் சென்று விற்கும் அவலங்களும் இங்கே அரங்கேறியது அதிர்வுகளை ஏற்படுத்தியது.

மின்சாரம் கனவான சேர்வராயன் மலை

சேர்வராயன் மலையிலுள்ள ஏற்காட்டில் 63 குக்கிராமங்கள் உள்ளது. இங்கு மின்தடை என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திலுள்ள சர்வமலையில் 600க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள்  வசிக்கின்றனர். இவர்களுக்கு வீடு என்பது உண்பதற்கும்,  உறங்குவதற்கும் மட்டும்  தான். மற்றபடி இவர்களின் வாழ்க்கை எப்போதும் வீட்டிற்கு வெளியே தான். சுதந்திரகாலம் தொட்டு இவர்களுக்கு மின்சாரம் என்பது கனவாகவே உள்ளது. இன்றுவரை இந்த மக்கள், மண்ெணண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி,  தீப்பந்தம் வைத்தே, இருளை போக்கி வருகின்றனர்.

கேள்விக்குறியாய் இடஒதுக்கீடுகள்

மலை  கிராமங்களில் கடந்த சில வருடங்களாக கல்வி கற்க வேண்டும். அப்படி கற்றால்   அரசிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு   அதிகரித்துள்ளது. இதன் காரணமாக  பொறியியல், ஆசிரியர் பயிற்சி போன்ற  படிப்பு   முடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பில் எஸ்டி   மக்களுக்கு மத்திய அரசு 7 சதவீத இட ஒதுக்கீடும், தமிழக அரசு ஒரு சதவீத இட   ஒதுக்கீடும் அறிவித்துள்ளது. ஆனால் அது முழுமையாக நடைமுறை   படுத்தப்படுகிறதா? என்றால்  கேள்விக்குறி தான். இதை முறையாக செயல்படுத்தினாலே அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்கிறார் பழங்குடியினர் நலஆர்வலர் பிரதாபன். 

Related Stories: