தென்காசியை தொடர்ந்து சங்கரன்கோவில் தனி மாவட்டம் வலுக்கும் கோரிக்கை - வெடிக்கும் போராட்டம்

சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி தனி மாவட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், சங்கரன்கோவிலையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், வியாபாரிகள்  போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பு  இருந்தது. எனினும் தென்காசி தனி மாவட்டமானால்  சங்கரன்கோவில், திருவேங்கடம்  ஆகிய தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தில் சேர்க்கப்படும் என்ற அச்சம்  உருவானது. சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளை பொறுத்தவரை போக்குவரத்து  உள்ளிட்ட அனைத்து வசதிகளும்  நெல்லைக்கே வசதியாக உள்ளது. எனவே  சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை தென்காசி புதிய மாவட்டத்தில்  சேர்க்கக் கூடாது. நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி  மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ பிள்ளையார் சுழி போட்டார்.

இதைத்  தொடர்ந்து சங்கரன்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன்  தலைமையில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை  சேர்க்கக் கூடாது என மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மேலும் பருவமழை  சரியாக இல்லாததால் வறட்சியான நிலையில் உள்ள சங்கரன்கோவில் சுற்றுவட்டார  பகுதிகளை இணைத்து பொதுமக்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில்  சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தனி  மாவட்டமாக அமைக்க வேண்டும் என தனி  மாவட்ட கோரிக்கையை முன்வைத்து சங்கரன்கோவில் மாவட்ட இயக்க ஒருங்கிணைப்பு  குழு என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. இதில் அனைத்துக்கட்சியினர், பல்வேறு  அமைப்புகள், தனியார்  நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்  இணைந்து  தனி மாவட்டம் கோரிக்கையை வலுவாக முன் வைத்தனர்.

 

இந்த  குழுவினர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான  ராஜலெட்சுமியை சந்தித்து தனி மாவட்ட கோரிக்கை மனுவை அளித்தனர். இதையடுத்து  வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரனையும் சந்தித்து மனு  அளித்தனர்.

  சங்கரன்கோவிலை தனிமாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழக அரசின் கவனத்தை  ஈர்க்கும் வகையில் கடந்த செப்.17ம் தேதி சங்கரன்கோவிலில்  கடையடைப்பு, பேரணி, மற்றும் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு  விடுக்கப்பட்டது.  இதற்கு நகை வியாபாரிகள் சங்கம், நகர வர்த்தக சங்கம்,  திருவேங்கடம் சாலை வியாபாரிகள் சங்கம், திருவள்ளுவர் சாலை வியாபாரிகள்  சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம், பாத்திர வியாபாரிகள் சங்கம், மாஸ்டர்  வீவர்கள் சங்கம், சிறு  விசைத்தறியாளர்கள் சங்கம், நகர கணக்காளர்கள் சங்கம்,  சங்கர நாராயண சுவாமி கோயிலில் உள் கடை வைத்திருப்போர் சங்கம்,  முடிதிருத்துவோர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து  வேலைநிறுத்தத்திற்கு முழு  ஆதரவு அளித்தனர். இதனால் சங்கரன்கோவிலில் அனைத்து  கடைகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் இயங்கவில்லை.

சங்கரன்கோவிலில்  உள்ள 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் உள்ள 15000க்கும் அதிகமாக  தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் அன்று  சுமார் 5  ஆயிரம் பேர் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பு  இருந்து பேரணியாக  புறப்பட்டு ராஜபாளையம் சாலை, திருவேங்கடம் சாலை வழியாக சென்று  சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆதி நாராயணனிடம் மனு  அளித்தனர். தொடர்ந்து நெல்லை கலெக்டர், தென்காசி மாவட்ட  தனி அலுவலரையும்  சந்தித்து மனு அளித்தனர். அடுத்த கட்டமாக முதல்வர், துணை முதல்வர், மாவட்ட  கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து  சங்கரன்கோவில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும்,  திமுக தலைமை தீர்மான குழு உறுப்பினருமான தங்கவேலு கூறியதாவது: நெல்லை  மாவட்டம் 1810 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பெரிய  மாவட்டமாகும். பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் விரைவாக சென்றடைய வேண்டும்  என்பதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. மாவட்ட தலைநகரம் அமைந்துள்ள  பகுதி அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற  பகுதிகளில் இருந்து 50 கிமீ. மிகாமல்  இருந்தால் மக்கள் எளிதாக சென்று வர வசதியாக இருக்கும். திருவேங்கடம்  தாலுகா பகுதி கிராமங்கள், மேலநீலிதநல்லூர் பகுதி கிராமங்கள் தென்காசி  மாவட்டத்தோடு சேர்க்கும் பட்சத்தில் அந்தப் பகுதி மக்கள் மாவட்ட  தலைநகருக்கு சென்று வர 100 கி.மீ.க்கு மேல் பயணம் செல்ல வேண்டிய நிலை   உருவாகும். மேலும் இரண்டுக்கும் அதிகமான பஸ்கள் பிடித்து ஏறி செல்லும் நிலை  உள்ளது.

எனவே சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்தால்  அந்தப்பகுதி மக்கள் எளிதாக அரசு அலுவலகங்கள்,  மருத்துவமனைகளுக்கு சென்றுவர  வசதியாக இருக்கும். 1989ல் திமுக ஆட்சிக்காலத்தில் சங்கரன்கோவிலில்  போக்குவரத்து பணிமனை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் முக்கிய பகுதிகளுக்கு  சென்றுவர போக்குவரத்து வசதி உள்ளது. சங்கரன்கோவில் தனி  மாவட்டமாக அமைந்தால் அரசு அலுவலங்கள் கட்ட தனியாக இடத்தை நில ஆர்ஜிதம்  செய்ய வேண்டிய நிலை இல்லை.  ஏற்கனவே உள்ள தாலுகா அலுவலகம் அருகே 9 ஏக்கர்  நிலமும், கழுகுமலை ரோட்டில் உள்ள  உணவு சேமிப்பு கிடங்கு எதிரே  சுமார் 20  ஏக்கர் இடமும், நெல்லை சாலை சண்முக நல்லூர் விலக்கில் சுமார் 85 ஏக்கர்  அரசாங்க இடமும் உள்ளது. இது அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும்  தொழிற்சாலைகள் கொண்டுவர  ஏதுவான இடமாகும்.

 சங்கரன்கோவில்  சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களின் மையப்பகுதி ஆகும். சங்கரன்கோவில்  பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில் அதிகமாக உள்ளது. உணவு பொருட்கள்  மற்றும்  எலுமிச்சை, பூ ஆகிய பொருட்கள் இங்கிருந்து பிற  மாவட்டங்களுக்கும்,  மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும் சங்கரன்கோவிலில் விசைத்தறி மிக  முக்கிய தொழிலாகும். சங்கரன்கோவில், சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில்  ஆயிரக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. மேலும்  அதிகமாக ஜிஎஸ்டி வரி கட்டும் பகுதி சங்கரன்கோவிலாகும். எனவே சங்கரன்கோவிலை  தலைமை இடமாக கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்தது போல் நெல்லை  மாவட்டத்தையும் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில் என மூன்று மாவட்டங்களாக பிரித்து திருவேங்கடம், சிவகிரி, வீகே புதூர், சங்கரன்கோவில் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி சங்கரன்கோவில் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்’  என்றார்.

நிறைவேறும் வரை போராடுவோம்

சங்கரன்கோவில் மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த சங்கரன்கோவில் நகர வர்த்தக சங்க தலைவர்  முத்தையா கூறியதாவது: நெல்லையிலிருந்து பிரித்து தென்காசி தனி மாவட்டமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி தனி  மாவட்டமாகும் பட்சத்தில் சங்கரன்கோவில்  பகுதி மக்களுக்கு பலன் கிடையாது. சங்கரன்கோவில் தனி மாவட்டமாகும்  பட்சத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை,  மாவட்ட நூலகம், மாவட்ட  நீதிமன்றம் ஆகியன அமையும். இந்தப்பகுதி மக்களின்  வாழ்வாதாரம் பெருகும்.   சங்கரன்கோவில் மழையை நம்பி உள்ள பகுதியாகும்.  இங்கு எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. தனி மாவட்டம் அமைந்தால்  தொழிற்சாலைகள்  உருவாகும் வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் வேலைவாய்ப்பு  பெருகும். தனி மாவட்டம் என்ற  கோரிக்கை நிறைவேற அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள்  நடத்தப்படும்’ என்றார்.

‘‘இறுதி முடிவு அரசின் கையில்

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், நெல்லையை பிரித்து தென்காசி தனி மாவட்டம் உருவாக்க அரசு அறிவித்துள்ளது. அதற்காக நெல்லை, தென்காசியில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கருத்து கேட்பு  கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்கரன்கோவில் தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் தமிழக அரசுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: