என்.ஐ.ஏ.விடம் பிடிபட்ட செல் நம்பரை கோவை சிறையில் பயன்படுத்தியது யார்?

* தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பா என அதிகாரிகள் ரகசிய விசாரணை

கோவை: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சந்தேக வளையத்துக்குட்பட்ட செல்போன் எண் கோவை மத்திய சிறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் நடந்த சோதனையில் 24 செல்போன்கள், 4 லேப்டாப்கள், 16 மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதை சிறை நிர்வாகத்தினர் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சிறையில் இருந்து தீவிரவாத அமைப்பினருடன் தொடர்ப்பு கொண்டதால் இந்த சோதனை நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. கோவை மத்திய சிறையில் 2 ஆயிரம் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள உயர் பாதுகாப்பு பிரிவில் கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகள் 22 பேர் வைக்கப்பட்டுள்ளனர். இங்கு செல்போன் பயன்படுத்துவதாக சிறை நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை மாலை சிறைத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது, 7 செல்போன்கள் சிக்கியுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது இந்த ரெய்டின் பின்னணி குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கொச்சி என்.ஐ.ஏ அலுவலக அதிகாரிகள் கோவையில் சிலரை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த எண் கோவை மத்திய சிறை வளாகத்தை காட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவை சிறைத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல் நாள் சோதனையின்போது 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்த போலீசார், மறுநாள் சோதனையின்போது கிடைத்த 24 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 4 லேப்டாப்கள், 16 மெமரி கார்டுகள் ஆகியவற்றை மறைத்துள்ளனர். இதையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை சிறை வளாகத்தில் உபயோகத்தில் அந்த செல்போன் எண்ைண பயன்படுத்துவது யார் என்று ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: