தசரா விழா நாளை தொடக்கம்

பெங்களூரு: உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, மைசூரு மாநகரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. நவராத்திரி விழா நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாசாரம் அழியாமல் காக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தசரா விழா நாளை தொடங்குகிறது. காலை 9.39 மணி முதல் 10.25 மணிக்குள் சாமுண்டி மலையில் குடிக்கொண்டுள்ள சாமுண்டீஸ்வரிதேவிக்கு பூஜை செய்யப்படுகிறது.

 அதை தொடர்ந்து, மலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் சாமுண்டி தொகுதி சட்டபேரவை உறுப்பினர் ஜி.டி.தேவகவுடா தலைமையில், முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா முன்னிலையில் தசரா விழாவை கன்னட எழுத்தாளரும், பத்ம விருது பெற்றவருமான எஸ்.எல்.பைரப்பா, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து துவக்கி வைக்கிறார். விழாவின் கடைசி நாளான வரும் அக்டோபர் 8ம் தேதி விஜயதசமி நாளில் வரலாற்று சிறப்புமிக்க யானை ஊர்வலம் நடக்கிறது. இதை காண லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். தசரா விழா தொடங்க இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் மைசூரு மாநகராட்சி இணைந்து முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தசரா விழாவையொட்டி மைசூரு மாநகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Stories: