வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் குளிக்க அனுமதியில்லை

*வறண்ட அருவியில் நீர் வந்தும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே தொடர்மழை காரணமாக வறண்டு கிடந்த குட்லாடம்பட்டி அருவியில் நீர் வரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில் கஜா புயலின்போது சேதமடைந்த பாதைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அருவிக்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் அமைந்துள்ளது மதுரையின் குற்றாலம் என்றழைக்கப்படும் தாடகை நாச்சியம்மன் நீர்வீழ்ச்சி. இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் நீரின்றி வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அருவிக்கு தற்போது நீர்வரத்து வர துவங்கியுள்ளது. இதையறிந்து அருவியில் ஆனந்த குளியல் போட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது அடிவாரத்திலிருந்து அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகள், பாதைகள் உள்ளிட்டவை பெரும் பாறைகள் உருண்டு வந்ததால் சேதமடைந்தன.இச்சம்பவம் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் சேதமடைந்த பகுதிகள் இதுவரை முறையாக சீரமைக்கப்படவில்லை. மேலும் அருவிக்குச் செல்லும் பாதையும் பாதுகாபில்லாமல் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

இதனால் பல கிலோ மீட்டர் தூரம் ஆசையோடு அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் தங்களை அருவிக்கு குளிக்கச் செல்ல அனுமதிக்குமாறு வனத்துறையினரோடு சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இருப்பினும் வனத்துறையினர் அருவிக்கு செல்ல அனுமதிக்காமல் பாதையை இழுத்து மூடியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் இனியாவது அருவிக்கு செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக சீரமைத்து அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: