சபரிமலை பயணத்துக்கு ஒரே முன்பதிவு ; பக்தர்கள் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம் : தேவசம்போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம் : சபரிமலை பயணத்துக்கு, தற்போதுள்ள மூன்று விதமான முன்பதிவு நடைமுறைகள் மாற்றப்பட்டு, ஒரே முன்பதிவு முறை ஏற்படுத்தப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு செல்பவர்கள், பயணம், தரிசனம், அறை முன்பதிவு போன்றவற்றிற்கு, தனித் தனியாக முன்பதிவு செய்து வந்தனர். இந்த நடைமுறை மாற்றப்பட்டு, அனைத்திற்கும் ஒரே விதமான முன் பதிவு என்ற திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. சபரிமலைக்கு பயணம் செய்ய மூன்றுவிதமான முன் பதிவுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் உள்ள பதமநாபபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், “சபரிமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் இறங்கி, பின்னர், கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என முடிவு செய்து, கடந்த சீசனில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி, பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம். அதனால், பயணம், தரிசனம், அறை முன்பதிவு, போன்ற அனைத்துக்கும், ஒரே விதமான முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.என்றார்.

மேலும், வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு செய்ய முடியாதவர்களுக்கு, நிலக்கல் மற்றும் பம்பையில், தேவசம்போர்டு சார்பில் முன்பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சபரிமலைக்கு எத்தனை பேர் வருகின்றனர் என்பதை அறிய முடியும் என கூறினார். மேலும் முன்பதிவு கட்டாயம் என்பது உடனடியாக அமலுக்கு வராவிட்டாலும், நாளடைவில் அது கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: