அயோத்தி வழக்கு விசாரணை: அக்.18-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்க முடியாது...உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு திட்டவட்டம்

டெல்லி: அயோத்தி வழக்கில் வாதங்களை முன்வைப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 18-ம் தேதிக்குப் பிறகு ஒருநாள் கூட நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியம், இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா ஆகிய 3 அமைப்புகள் பிரித்து நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள  அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் 6-ம் தேதி முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்  தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையானது இன்று வரை 32-வது நாளை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான வாதங்களை அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள்  தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, வழக்கின் வாதங்களை முன் வைப்பதற்கான கால அவசாகம் அக்டோபர் 18-ம் தேதிக்குப் பின் ஒருநாள் கூட நீட்டிக்கப்பட மாட்டாது என நீதிபதிகள் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அதற்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என ரஞ்சன் கோகாய் நினைப்பதாக தகவல்  தெரிவிக்கப்படுகிறது. வழக்கு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், தீர்ப்பு எழுத இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளது. அப்படி 4 வாரங்களில் வாதங்கள் அனைத்தும் முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டால் அது அதிசயமான  விஷயமாக இருக்கும் என்றார்.

Related Stories: