விலை உயர்வை கட்டுப்படுத்த 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை: அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை: வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசும் நடவடிக்கை  எடுத்தது. இந்நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கூட்டுறவுத்துறை, உணவுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு  நாட்களாக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

வெங்காயத்ைத வெளிமாநிலங்களில் வாங்கி குறைந்த விலைக்கு பசுமை பண்ணை கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த பொருட்கள் விலை அதிகமானாலும் விலை உயர்வை கட்டுப்படுத்தும்  வகையில், சந்தை விலையில் வாங்கி குறைவான விலைக்கு விற்கப்படும். அதன்படி, ஆந்திராவில் இருந்து வெங்காயம் வாங்கப்பட்டு குறைவான விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது இரண்டு நாட்கள் வரைதான்  தாக்குபிடிக்கும். அதை மக்கள் அதிகம் வாங்க மாட்டார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்படும்.

அதன்படி இன்று முதல் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 34 டன் வெங்காயம் தற்போது உள்ளது. மேலும் வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், டியுசிஎஸ் தலைவர் தேவேந்திரன், டான்பெட் தலைவர் செல்லபாண்டி, இணை பதிவாளர் சந்திரசேகர் ஆகியோர்  உடனிருந்தனர்.

Related Stories: