தூத்துக்குடியில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்: 12 கல்லூரிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: NSS  துவங்கி 50வது ஆண்டினை முன்னிட்டு 12 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட  நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழகத்திலேயே தோன்றி தமிழகத்திலேயே கலக்கக்கூடிய ஒரு வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆகும்.நெல்லை மாநகர பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் கல்லூரி மாணவர்கள் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை போலவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான கீதா ஜீவன் கலை, அறிவியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரிகளை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 7 கட்டங்களாக பிரித்து ஏரல், சேயாத்தூர், முக்காணி, சேதுபூமி மங்களம், மங்கலக்குறிச்சி உள்ளிட்ட 7 இடங்களில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.

வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறானது அமலைச் செடிகள் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் அசுத்தப்பட்டிருப்பதால் நீர்ப்பிடிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இவற்றை தூய்மைப்படுத்தும் முயற்சியில் மாணவர்கள் தண்ணீரில் இறங்கியும், பொக்லைன் இயந்திரம் கொண்டும் சுத்தப்படுத்தினர். இந்த பணியானது சுமார் 8 மணி நேரமாக நடைபெற்றது. இதனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி துவக்கி வைத்தார். மேலும் இந்த பணியினை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: