தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை 3,000 ஏக்கர் குறுவை பயிர் தண்ணீரில் மூழ்கியது

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் 3,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். டெல்டா மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 14 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர்கள் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது. ஆனால், பலத்த மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், அம்மாப்பேட்டை, கம்பர்நத்தம், கோவிலூர், சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதில் பல இடங்களில் கதிர்கள் அடியோடு சாய்ந்துள்ளதால் அறுவடை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வயலில் தேங்கியுள்ள மழைநீரை  வடிய விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வடிகால்கள் சரியான  முறையில் தூர்வாரப்படாததால் நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  நெல்மணிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேளாண்துறை  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்தால்  நிலைமை இன்னும் மோசமாகும் என தெரிவித்தனர்.

Related Stories: