குடிமக்கள் பதிவேடு பணியை மேற்குவங்கத்தில் நடத்த அனுமதிக்க மாட்டேன்: முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: ‘‘குடிமக்கள் பதிவேடு பணியை, மேற்கு வங்கத்தில் நடத்த அனுமதிக்க மாட்டேன்’’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தங்கியிருந்தனர். அவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 லட்சம் பேர் இடம் பெறவில்லை.  இவர்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தை அணுகும்படி கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உண்மையான குடிமக்கள் பலரது பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், வங்கதேசத்தைச் சேர்ந்த பலரது பெயர்கள் என்ஆர்சி பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அசாம் மாநிலத்தில் வங்காள ெமாழி, இந்தி மொழி பேசும் மக்கள் பலர் என்ஆர்சி பட்டியலில் இடம்  பெறவில்லை. அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும் என அமித்ஷாவிடம், மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். அன்று மாலை ஒரு நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர், ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்டு சட்டப்படி வெளியேற்றப்படுவர்’’ என கூறினார்.

இந்த அறிவிப்பு மேற்குவங்கத்தில் பலருக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த வர்த்தக சங்க  கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, மேற்கு வங்கத்தில் பா.ஜ பீதியை கிளப்புவது வெட்கக்கேடு. இதன் காரணமாக 6 பேர் பலியாகிவிட்டனர். என் மீது நம்பிக்கை வையுங்கள். குடிமக்கள் பதிவேடு பணியை மேற்குவங்கத்தில் மேற்கொள்ள  நான் அனுமதிக்க மாட்டேன். அசாம் ஒப்பந்தம் காரணமாக என்ஆர்சி பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினரை வெளியேற்ற வேண்டும் என அசாம் மாணவர்கள் யூனியன் 6 ஆண்டுக்காலம் போராட்டம்  நடத்தியது. இதை முடிவுக்கு கொண்டு வர கடந்த 1985ம் ராஜிவ் காந்தி அரசுக்கும், அசாம் மாணவர்கள் யூனியனுக்கும் இடையே அசாம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படிதான் அங்கு என்ஆர்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது. வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை பற்றி பேசாமல் பா.ஜ, அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் செயல்படுகிறது. நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து அடுத்த  மாதம் 18ம் தேதி பேரணி நடத்தப்படும். அதில் நான் பங்கேற்பேன். ஊடகங்கள் தான் ஆற்ற வேண்டிய பணியை செய்யவில்லை. அவை பா.ஜ அரசுக்கு பணிந்து போகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, மேற்கு வங்கத்தில் பா.ஜ பீதியை கிளப்புவது வெட்கக்கேடு

Related Stories: