சுரண்டையில் இன்று காலை சம்பவம்: பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் கால்முறிவு

சுரண்டை: சுரண்டை பஸ் நிலையத்தில்  இன்று காலை மனநிலை பாதித்த பெண் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சுரண்டை பஸ் நிலையம் இன்று காலை வழக்கம்போல் பரபரப்புடன் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள்,  அரசுமற்றும் தனியார் நிறுவன ஊழியர் கள்  தங்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். காலை 7.30 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று பஸ் நிலையத்தில் உள்ளே வந்தது. அப்போது பஸ்நிலையத்தில் சுற்றித்திரிந்த சுமார் 45 வயது மதிக்கத்த பெண், பஸ் வருவதை கண்டுகொள்ளாமல் சாலையின் குறுக்கே மனம்போனபடி சென்றார். இதை கவனித்த பஸ் டிரைவர், பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் கட்டுப்படுத்த முடியாததால் மனநிலை பாதித்த பெண் மீது மோதியது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனால் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சுரண்டை காவல்நிலைய காவலர் குற்றாலிங்கம் என்பவர் பொது மக்கள் உதவியுடன் காயம் அடைந்த பெண்ணை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயம் அடைந்த பெண், சுரண்டை பஸ் நிலையத்தில் நீண்டநாட்களாக சுற்றித்திரிந்து வருகிறார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

Related Stories: