அன்று ரகு ; இன்று சுபஸ்ரீ விதிமீறல் பேனர்களால் தொடரும் மரணங்கள்: தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை

விதிகளை மீறி சட்ட விரோதமாக  வைக்கப்படும் பேனர்களால் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்றும், அது தொடர்பான சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கி அனைத்து அமைப்புகளும் தங்களது அமைப்பு சார்ந்த  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பேனர் மற்றும் விளம்பர பலகைகளை  வைக்கின்றனர். இந்த பேனர் வைக்க உரிய அனுமதி பெற்று விதிகளின்படிதான் வைக்க வேண்டும். ஆனால் பேனர் வைப்பவர்கள் பெரும்பலானர்கள் இந்த விதிகளை முறையாக பின்பற்றுவது இல்லை. மேலும் உரிய அனுமதி இல்லாமல் விதிகளை மீறி பேனர்களை வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக சட்டத்தை மீறி சாலைகளின் நடுவில் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்தும் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

இவ்வாறு கடந்த ஆண்டு கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக, அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதன்பிறகும் பல்வேறு அரசியல் கட்சிகள் விதிகளை மீறி பேனர்களை வைத்துக் கொண்டேதான் இருந்தன. இந்நிலையில் அனுமதியின்றி பேனர் வைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த ெசன்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் யாரும் இந்த உத்தரவை முழுமையாக பின்பற்றவில்லை. தொடர்ந்து சட்டவிரோதமாக பேனர்களை வைத்து கொண்டேதான் இருந்தனர். அரசும் அதிகாரிகளும் உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத்  திருமண நிகழ்ச்சிக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்து சுப என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு உடனே வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

சுபஸ்ரீ போன்று எத்தனை உயிர்கள் இன்னும் வேண்டும் என்று கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அவற்றை மதிக்காமல் தொடர்ந்து விதிகளை மீறி ேபனர்களை வைக்க அரசு அனுமதி அளித்து கொண்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த மரணங்களுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பேனர் விதிமீறல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள், கொடிகள் வைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சென்னையில் விதிகளை மீறி விளம்பர பேனர்களை அமைப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக விளம்பர பேனர் வைப்பவர்கள் மீது ஒராண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு விளம்பரப் பதாகைக்கு ₹5,000 வீதம் அபராதம்  அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியின் அனுமதி உத்தரவின்றி பேனர்கள் அச்சடிக்கும் அச்சக நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடி சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோத பேனர்கள் தொடர்பாக புகார் அளிக்க சிறப்பு எண்களையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  இதைப்போன்று மற்ற மாநகராட்சி, நகராட்சிகள் சார்பில் தனியாக தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர் கதையாகி வரும் இந்த மரணங்களை தடுப்பதற்கு பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக விதிகளை மீறி பேனர் வைப்பர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைதான் இனிமேல் பேனர் வைப்பவர்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கும் என்றும்  பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக சாலை நடுவில் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து விதிகளை மீறி  பேனர்களை வைப்பவர்கள் மீது உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பேனர் வைக்க மாட்டோம் என்று அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் அதை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் இதை மீறும் கட்சி தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சுப மரணத்திற்கு காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சட்டவிரோதமாக பேனர் வைத்து இளம் பெண் மரணத்திற்கு காரணமாக ெஜயகோபாலை இத்தனை நாட்கள் கைது செய்யாமல் இருப்பதற்கு யார் காரணம் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விதிகள் என்ன ?

* பேனர் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் போலீசிடம்  தடையில்லா சான்று பெற வேண்டும்.

* ஒவ்வொரு பேனருக்கு 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

* இரண்டு நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்து முறையாக அனுமதி பெற வேண்டும்

* பேனரின் கீழ் பகுதியில் அனுமதி நாள், எண், அளவு, கால அவகாசம், அச்சகத்தின் பெயர் ஆகிய

தகவல்களை  குறிப்பிட வேண்டும்.

* கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து 100 மீ தொலைவு வரை பேனர் வைக்க கூடாது.

* சாலையின் நடுவில் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக  பேனர் வைக்க கூடாது

Related Stories: