அனுமதி பெறாத பார்களை மூட டாஸ்மாக் எம்.டி தலைமையில் மாவட்ட மேலாளர்கள் கூட்டம்: தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது

சென்னை: டாஸ்மாக் எம்.டி. தலைமையில் மாவட்ட மேலாளர்கள் கூட்டம்  எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் அனுமதி பெறாமல் இயங்கும் பார்களை மூடுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அனுமதி பெறாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களை தீவிர ஆய்வு செய்து மூடவேண்டும் என்று தலைமை அலுவலகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மாவட்ட மேலாளர்களும், முதுநிலை மண்டல மேலாளர்களும் கடந்த சில மாதங்களாகவே தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாளை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்குழு கூட்டம் மேலாண்மை இயக்குனர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 5 முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்த கூட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் பார்களை மூடியது குறித்தும், மீதம் உள்ள பார்களை மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்படும். இதேபோல், பார் டெண்டர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, பார் உரிமக்கட்டணம் குறித்தும் இதில் பேசப்பட உள்ளது. இதேபோல், கடை ஆய்வுகள்  குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: