இந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1,160 கிலோ போதைப்பொருள்: கடலோர காவல்படையினர் அதிரடியாக பறிமுதல்

போர்ட் பிளேர்: இந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1,160 கிலோ போதைப்பொருளை கடலோர காவல்படையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். நேற்றிரவு இந்திய கடலோர பகுதியான அந்தமான் நிகோபார் பகுதியில், சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்று பயணத்தில் இருந்துள்ளது. இந்த கப்பலை கவனித்த அதிகாரிகள், அந்தமான் நிகோபார் கடலோர காவல்படையின் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜ்வீர் கப்பல் மூலம் சந்தேகத்திற்கு இடமான கப்பலை பின்தொடர்ந்துள்ளனர். ஆனால், அந்த கப்பல் வேகமாக இயக்கப்பட்டதை அடுத்து, 15 முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட கடலோர காவல்படையினர், அக்கப்பலை மடக்கி பிடித்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மியான்மரில் இருந்து வந்த அக்கப்பல், இந்திய எல்லை வழியாக தாய்லாந்து நாட்டிற்கு செல்லக்கூடியது என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, 1,160 கிலோ எடையுள்ள கேடமின் என்ற போதைப்பொருளை மியான்மரை சேர்ந்த 6 பேர் கடத்திச்செல்வதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராஜ்வீர் கப்பலில் சென்ற அதிகாரிகள், அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பறிமுதல் சம்பவமானது, அந்தமான் நிகோபார் கடல் எல்லைப் பகுதியிலிருந்து 150 நாட்டிகல் மைல் தூரத்தில் நடந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த போதைப்பொருளின் மதிப்பானது சர்வதேச மதிப்பில் சுமார் 1,150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இனைத் தொடர்ந்து, கடலோர காவல்படையை சேர்ந்த அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மியான்மரை சேர்ந்த இந்த கப்பலானது, அந்தமான் நிகோபார் கடலோர காவல்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: