போலி சான்றிதழ் அளித்து மதுரை மருத்துவக்கல்லூரில் சேர்ந்த மாணவர்: ரூ.60 லட்சம் கொடுத்து சான்றிதழ் வாங்கியது விசாரணையில் அம்பலம்

மதுரை: போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர் பிடிபட்டார். தற்போது இந்த மாணவர் தல்லாக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஒரு போலி இடஒதுக்கீடு கடிதம் வழங்க ரூ.60 லட்சம் விலை நிர்ணயம் செய்து வந்துள்ளனர். இந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து போலி சான்றிதழ் கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக வாக்குமூலத்தில் மாணவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லுரியில் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அவர்கள் சென்னையில் எங்கு பதுங்கியுள்ளனர் என கண்டுபிடிக்க மாநகர காவல்துறையின் உதவியை நாடியதால் சென்னை முழுவதும் உதித்சூர்யாவை தேடும் பணி தற்போது முடிக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மருத்துவ கல்லூரிகளை குறிவைத்து இவ்வாறு மோசடி செய்வது புதிதல்ல; பலமுறை அரங்கேறி இருக்கக்கூடிய நிகழ்வு என்ற தகவலும் கிடைத்துள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 10ம் தேதி போலி ஒதுக்கீடு கடிதத்துடன் மதுரை மருத்துவக்கல்லூரியில் ரியாஸ் என்ற மாணவர் சேர்ந்துள்ளார். அவரது கடிதத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் வனிதா, தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த ரியாஸ் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, நீட் தேர்வு விவகாரத்தில் மெகா மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

டெல்லியில் உள்ள மோசடி கும்பல் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர போலி இடஒதுக்கீடு கடிதம் தயாரித்து லட்சக்கணக்கில் விற்றது வெளியாகியுள்ளது. அந்த கும்பலை சேர்ந்த விக்ரம் சிங் என்பவரிடம் இருந்து, மதுரை மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான இடஒதுக்கீடு கடிதத்தை பெற்றதாக மாணவர் ரியாஸ் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த போலி கடிதம் டெல்லியை சேர்ந்த மெடிக்கல் கவுன்சிலிங்கில் இருந்து கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு கடிதம் போன்று அச்சு அசலாக உள்ளது. இதையடுத்து போலி சான்றிதழ் தொடர்பாக விசாரணை மேலும் வலுவடைத்துள்ளது. தனது மகன் மருத்துவப்படிப்பை படிக்க வேண்டு என்பதற்காக ரியாஸின் பெற்றோர் அந்த போலி கடிதத்தை தவணை முறையில் பணம் செலுத்தி வாங்கியதாக அந்த மாணவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: