பிரதமர் மோடி, சீனா அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர்  மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11ம் தேதி வருகை தர உள்ளனர். அக்டோபர் 11,12,13 ஆகிய நாட்களில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். இங்குள்ள கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம்  உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவர்கள் சுற்றிப் பார்க்க உள்ளனர். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்காக, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, மாமல்லபுரம் நகரம் பாதுகாப்புப் படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு வந்து சென்றனர். இதையடுத்து நேற்று சீன பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 50 பேர் மாமல்லபுரத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மத்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரி எஸ்.எஸ்.ஷோஹனுடன், சீனாவில் இருந்து வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாமல்லபுரத்துக்கு வந்தனர். சீன அதிபர் பார்வையிடும் முக்கிய புராதன இடங்கள் குறித்தும் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரத்தின் முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்வையிட்டனர். இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயரதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் தற்போது மாமல்லபுரத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள நினைவு சின்னங்கள் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் மண்டபம், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே, இந்த பகுதியில் உள்ள கடைகள், வெளிமாநிலத்தவர், வெளிநாடுகளில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பவர்களை பாதுகாப்புப்படை கண்காணித்து வருகின்றனர். கடலோர பாதுகாப்பு படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: