உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் 1,608 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியத் தொகையான 1,608 கோடி ரூபாயை மத்திய அரசு  விடுவித்திருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்  செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நடந்து முடிந்த சட்டமன்ற பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் பேசுகையில்,  மத்திய நிதி குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க கோரி, நான் பலமுறை புதுடெல்லிக்கு நேரில் சென்று, மத்திய அமைச்சர்களை நேரில்  சந்தித்து, கோரிக்கை விடுத்தேன்.

அதன் பேரில், மத்திய அரசு, நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய, 2015-16ம் ஆண்டு முதல் 2019-20 முதல்  தவணைத் தொகையான 12,312 கோடியே 74 லட்சம் ரூபாயில் கோடியில், இதுவரை தமிழகத்திற்கு 8,531 கோடியே 94 லட்சம் ரூபாய் அடிப்படை  மானியமாக விடுவித்துள்ளது. சமீபத்தில் 11.6.2019 அன்றும் கூட மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரையும், மத்திய  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியையும் நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு இன்னும் வர வேண்டிய பின்வரும் மத்திய நிதிக்குழு  மானியத் தொகையை வழங்க வேண்டி வலியுறுத்தி வந்தேன்.

2018-19ம் ஆண்டு 2ம் தவணைத் தொகை ரூ. 1608.02 கோடியும், 2019-20ம் ஆண்டு முதல் தவணை தொகை ரூ. 2172.78 கோடியும் ஆக மொத்தம் 3780 கோடியே 80 லட்சம் ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், 2017-18ம் ஆண்டிற்கான செயலாக்க மானியத்  தொகை ரூ. 560.15 கோடியும் விடுவிக்க நேரில் வலியுறுத்தி வந்துள்ளேன் என்றார்.

இந்நிலையில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக 9 கோடி ரூபாய் மதிப்பில் நாப்கின்கள் கொள்முதல்  செய்வதற்கான பணி ஆணை மற்றும் 91 ஒப்பந்த பணியாளர்களுக்குரிய பணி ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் 2019 -  2020ஆம் ஆண்டிற்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் மகளிர் சுய உதவி குழுக்களின் நவராத்திரி பொம்மைகள்  விற்பனை கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார்,  விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி  அமைப்புகளுக்கு 2015 - 16 தொடங்கி 2019 - 20 வரையில் 8 ஆயிரத்து 531 கோடியே 94 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்து இருப்பதாகக்  கூறினார். தற்போது ஆயிரத்து 608 கோடியே 3 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்து இருப்பதாகவும், இன்னும் 3 ஆயிரத்து 369 கோடியே 5  லட்சம் ரூபாய் தவணைத் தொகையை விடுவிக்க, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: