அக்.18ம் தேதியுடன் விசாரணை நிறைவு அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு?

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் -  பாபர் மசூதி தொடர்புடைய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா, ராம் லாலா, சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பங்கிட்டு கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ல் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூலை வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இதனால், இவ்வழக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று 2 மனுதாரர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மத்தியஸ்தம் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக நேற்றைய 26ம் நாள் விசாரணையில் தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘மனுதாரர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம். இது விசாரணைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பேச்சுவார்த்தையானது தொடர்ந்து ரகசியமாக நடத்தப்பட்டு வரும். தற்போது வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.

திட்டமிட்டபடி விசாரணை தொடர்ந்து நடந்தால், அடுத்த மாதம் 18ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதத்தையும் நிறைவு செய்ய முடியும்,’’ என்றார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ல் ஓய்வு பெறுகிறார். அதற்குள் இவ்வழக்கில் அவர் தீர்ப்பளிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அக்.18ம் தேதியுடன் விசாரணை முடியும் பட்சத்தில், அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

Related Stories: