நெல்லையில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் குப்பைகளை கொட்டிய மனசாட்சி இல்லா மனிதர்கள்: நீர்நிலை ஆர்வலர்கள் அதிர்ச்சி

நெல்லை: நெல்லையில் ரூ.12 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட வேய்ந்தான்குளத்தில் மீண்டும் மர்ம கும்பல் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனை சீரமைக்க உதவிய சமூக ஆர்வலர்கள் இச்செயலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நீர்நிலைகள், குளங்கள், கால்வாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் சமூக அமைப்புகள், தொண்டுநிறுவனங்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இப்பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்படுகின்றன.

இதில் முதல் பணியாக வேய்ந்தான்குளம் குடிமராமத்துப்பணி தொடங்கி நடந்தது. இக்குளம் அண்ணா பல்கலைக்கழகம், நம் தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் அமைப்புடன் இணைந்து கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சீரமைக்கப்பட்டது. முள்செடிகள், தேவையற்ற மரங்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. குளத்தில் ேதாண்டி எடுத்த மண் கரைகளில் வைக்கப்பட்டு கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டது. குளத்தின் உள்பகுதியில் சிறிய அளவிலான குன்று போன்ற பகுதி அமைத்து அதில் வெளிநாட்டுபறவைகள் வந்து அமரும் வகையில் மரங்களை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

குளம் சீரமைக்கப்பட்ட நிலையில் குளத்தில் பஸ்நிலையம் மற்றும் அருகே உள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கலப்பது தொடர்கிறது. இதை திருப்பிவிட சுட்டிகாட்டப்பட்டு மாநகராட்சியினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தெற்கு பைபாஸ் சாலை அருகே குளத்திற்கு வரும் மடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  பலஆண்டுகளுக்கு பின்னர் பளிச் என காணப்படும் வேய்ந்தான்குளத்தை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் சுத்தமாக்கப்பட்ட இந்த குளத்திற்குள் மர்ம கும்பல் குப்பை கொட்டியுள்ளது. உணவு கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டுள்ளன. இதில் மாடுகள் மேயத்தொடங்கியுள்ளன. இந்த காட்சி இக்குளத்தை சீரமைக்க பொருளுதவி, நிதியுதவி மற்றும் உடல் உழைப்பு அளித்த சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து  இக்குளம் சீரமைப்பு பணியில் பங்கெடுத்த நீர்நிலை ஆர்வலர்கள் கருத்து கூறுகையில், மாநகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த குளத்தில் நீர் நிரம்பினால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும் வெளிநாட்டு பறவைகள் வரத்தும் அதிகமாக இருக்கும். பஸ்நிலையம் அருகே இருப்பதால் சுற்றுலா பகுதிபோல் காட்சியளிக்கும். இந்த நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டோம். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் குளத்தில் மீண்டும் கழிவுகளை குவித்துள்ளனர். மனசாட்சி இல்லாத மனிதர்களால்தான் இதுபோன்ற செயல்களை செய்யமுடியும். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை சுற்றி எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து குப்பை கொட்டும் விஷமிகளை கைது செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: