வடக்கு டெல்லியில் விபத்து தாறுமாறாக வந்த கார் மோதி 2 ஆட்டோ டிரைவர்கள் பலி

புதுடெல்லி : வடக்கு டெல்லியின் சுவரூப் நகரில் நேற்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் இரு ஆட்டோ ஓட்டுநர்கள் பலியானார்கள்.

சுவரூப் நகரைச் சேர்ந்த சஞ்சய்  சரீன் (40), ஜெய்கிஷான் குப்தா (36) ஆகியோர் ஆட்டோ ஓட்டி வருவாய் ஈட்டி வந்தனர். பாலம் பைரான் என்கிளேவ் பகுதியில் வசிக்கும் மோஹித் (23) என்பவர் காரில் வேகமாக வந்துள்ளார். இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து ஜி டி கர்னல் சாலையில் சுவரூப் நகர் பேருந்து நிலையம் அருகே பயணிகளுக்காக காத்திருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. ஆட்டோவில் இருந்த அதன் ஓட்டுநர்கள் சஞ்சய், ஜெய் கிஷான் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை பிஜேஆர்எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பிறகு இவர்கள் லோக நாயக் ஜெயபிரகாஷ் நராயண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையில் கார் ஓட்டுநர் மோஹித் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, நள்ளிரவு 1.40 மணி அளவில் சுவரூப் நகர் பேருந்து நிலையத்தின் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்களின்  மீது  மோதியது தெரிய வந்துள்ளது.

விபத்தின் போது குப்தாவும், சரீனும் ஆட்டோவில்  உட்கார்ந்திருந்தனர். குப்தாவின் உறவினர் கூறுகையில், இந்த விபத்தில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. பாபு ஜெகஜீவன்ராம் மருத்துவமனையில்  அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பிறகு வீடு திரும்பினர். விபத்து அங்கிருந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் தகவல் தெரிவித்தனர். நான் அந்த பகுதியில்தான் வசித்து வருகிறேன் என்றார். அவர் மேலும் கூறுகையில், சரீனுடன் நான் மருத்துவமனையில் பேசினேன். என்ன நடந்தது என்பதை அவர் என்னிடம் கூறினார். நொடிப் பொழுதில் விபத்து நடந்து விட்டதாக கூறினார். ஜெய்கிஷான் உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தனது கண்களை தானம் செய்துள்ளார் என்றார். 

Related Stories: