சவுதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரிப்பு

ஹாங்காங்: சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் ஆலையில் ஏமன் கிளர்ச்சிப்படையினர் நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 10.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் பரிமாற்றச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டாலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டாலராக அதிகரித்தது. சவுதி அரேபியா அராம்கோவின் இரு ஆலைகளில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Advertising
Advertising

இந்த உற்பத்தி நிறுத்தம் இன்னும் பலவாரங்களுக்கு தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கபட்டுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஏற்பட்ட தீயை அணைக்கவும், கட்டுப்படுத்தவும் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த தாக்குதால் சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது ஏமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கு ஏமன் கிளர்ச்சியாளருக்கு ஈரான் ஆதரவு அளித்ததே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், அமெரிக்காவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எண்ணெய் வள ஆய்வாளர் ஜிம் புர்கண்ட் கூறுகையில், சவுதி எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது, உலகின் எண்ணெய் வள இருப்பில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் அடுத்துவரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை உயரும். அமெரிக்காவுக்கும், கனடாவும் இந்த விலை உயர்வை பாதிக்காமல் இருக்கும் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பு வைத்துள்ளன. ஆனால், மற்ற நாடுகளில் இந்த விலை உயர்வு வரும் நாட்களில் இருக்கும். இந்த உயர்வு பெட்ரோல், டீசல் விலையிலும் எதிரொலித்து நுகர்வோருக்கு சிரமத்தைக் கொடுக்கலாம் எனத் தெரிவித்தார்.

Related Stories: