நகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதாலும் கடையை மூட வலியுறுத்தி அதன் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுப்பதாலும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தொலைபேசி, இணையதள சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. பின்னர் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காததால் கட்டுப்பாடுகள், இணையதள மற்றும் தொலைபேசி சேவைகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கிராமங்களில் அவர்கள் சுதந்திரமாக சுற்று திரிவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், ஸ்ரீநகரில் ராஜ்பாக், ஜவகர் நகர், லால் சவுக் பகுதிகளில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்களை திறக்க கூடாது என அவர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம், ஆட்டோமொபைல் கடையை திறந்து வைத்து பழுது பார்த்து கொண்டிருந்ததைக் கண்ட தீவிரவாதிகள், அந்த கடைக்கு தீ வைத்தனர். மேலும், அஞ்சார், சவுராவை ஒட்டிய பகுதிகளில் தீவிரவாதிகள் தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர்.இது குறித்து கூறிய ஜம்மு தலைமை போலீஸ் அதிகாரி தில்பக் சிங், தீவிரவாதிகள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக கூறுவது மிகையான ஒன்று. அதற்காக அவர்கள் நடமாட்டமே இல்லை என்று கூற முடியாது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், ஆகஸ்ட் 20ம் தேதி பாரமுல்லாவிலும் செப்டம்பர் 9ம் தேதி சோபூரிலும் என 2 தீவிரவாத தாக்குதல்கள் மட்டுமே நடந்துள்ளன. ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Advertising
Advertising

Related Stories: